வரலாற்றுப் பெருமைகள் கொண்ட‌ சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.


சிதம்பரம் ரயில் நிலையம்.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சென்னையிலிருந்து சுமார் 217 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அண்ணாமலைப் பல்கலைக்கழகம். சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரமும், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும் பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் ரயில் நிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேருந்து வசதி உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் பல்கலைக்கழகத்திற்கு எளிதாக செல்லலாம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பெயர் பலகை.

சிதம்பரம் என்றாலே இரு கோவில்களை குறிக்கும். ஒன்று உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில். மற்றொன்று கல்வி கோவில் எனப் போற்றப்படும் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம். முதுபெரும் அறிஞர்களையும், தமிழ் புலவர்களையும், அரசியல் ஜாம்பவான்களையும் உருவாக்கியது இப்பல்கலைக்கழகம். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டமாக இருந்த அப்போதைய தென்னார்க்காடு மாவட்டம் தற்போது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டத்தில் தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் மூங்கில் வனமாக இருந்த திருவேட்களம் பகுதியில் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் 1920ம் ஆண்டில் தனது தாயார் பெயரில் மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் கல்லூரியை துவக்கினார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவிய டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார்.

1929ம் ஆண்டில் பல்கலைக்கழகமாக மலர்ந்தது.

மீனாட்சி கல்லூரிக்கு பிறகு 1927ல் தமிழ் கல்லூரி மற்றும் வடமொழி கல்லூரி இவைகளை நிறுவினார். 1929ல் இசைக்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். தமிழறிஞர் உ.வே. சாமிநாத ஐயரை தமிழ் கல்லூரிக்கும், அறிஞர் தண்டபாணி சுவாமி தீட்சிதரை வடமொழி கல்லூரிக்கும் மற்றும் சங்கீத ஜாம்பவான்களை இசைக்கல்லூரிக்கும் ஆசிரியர்களாக அமர்த்தினார். இம்மூன்று கல்லூரிகளையும் இணைத்து சென்னை கவர்னர் மற்றும் வைஸ்ராய் அனுமதியோடு 04.03.1929ல் அண்ணாமலைப் பல்கலைகழகத்தை நிறுவினார் அண்ணாமலை செட்டியார். அப்போது பல்கலைக்கழகத்திற்காக 300 ஏக்கர் நிலத்தையும் மற்றும் 20 லட்சம் ரூபாயும் வழங்கினார். இவ்வாறு துவங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பரிணாம வளர்ச்சி பெற்ற பல்கலைக்கழகமாக வளர்ந்தது. பின்னால் சுமார் 1000 ஏக்கர் நிலத்தில் பல்கலைக்கழகம் விரிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி அண்ணாமலை நகர் என்று அழைக்கப்பட்டது. தெற்காசியாவில் மிகப்பெரிய உறைவிட பல்கலைக்கழகமாக வளர்ந்து தற்போது 10 புலங்கள்,49 துறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம்.

கலை, அறிவியல் படிப்புகளில் உயர்கல்வி படிப்புகளை வழங்குகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்,மேலாண்மை (எம்.பி.ஏ),விவசாயம், இந்திய மொழிகள், நுண்கலை மற்றும் மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளை வழங்கி வருகிறது. 1929ம் ஆண்டில் அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம் ஆகும். ஆனால் இப் பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் ஆசிரியர், ஊழியர்கள் நியமிக்கப்பட்டதால் கடும் நிதி சிக்கல் ஏற்பட்டு ஆசிரியர், ஊழியர்கள் போராட்டத்தின் காரணமாக கடந்த 2013ம் ஆண்டில் தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் தமிழக அரசின் பல்கலைக்கழகமாக மாறியது. தற்போது இந்த பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் உயர்கல்வியின் துறையின் கீழ் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு ஏற்ற பிறகு பல்கலைக்கழகத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு பல்வேறு சீரமைப்பு பணிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து இப் பல்கலைக்கழகத்தில் மிகை பணியாளர்களாக பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள்,பல்வேறு அரசு பல்கலைக்கழகங்கள்,அரசு கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர். இதேபோன்று இப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தெற்காசியாவில் மிகப்பெரிய உறைவிட பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயில்.

தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உறைவிட பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 93 ஆண்டுகளைக் கடந்து மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் கல்வியளித்து உயரிய சேவைகளை செய்து வருகிறது. தேசிய தர நிர்ணயம் மற்றும் மதிப்பீட்டு குழுவால் 2014 ம் ஆண்டில் ஏ கிரேடு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஏ+ கிரேடு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கலை, அறிவியல், தத்துவம், மானிடவியல், பொறியியல், வேளாண்மையியல், கல்வியியல், கணிப்பொறியியல், தொழில்நுட்பவியல், இசை, மருத்துவம்,மேலாண்மை என பல துறைகளில் கற்பித்தல் மற்றும் ஆய்வுகள் சிறப்புடன் நடைபெறுகிறது. அண்ணாமலை பல்கலைகழகத்தின் நடப்பு 2023-24 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் ,பட்டயம்,சான்றிதழ் படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்பு மிக்க செயல் திறன் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்புகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்றவையாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புகள் இல்லாததால், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை சேர்த்து ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த முதுகலை பட்டப் படிப்பாக இங்கு பயிலலாம். அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்காக சேர்க்கை தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தலைசிறந்த வேளாண் கல்லூரிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலமும் ஒன்று. இந்த வேளாண் புலத்தில் விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட 9 துறைகள் உள்ளன. வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இணையம் மூலம் நடைபெறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டயப் படிப்பு படித்த மாணவர்களுக்கு என்எல்சி யில் வேலை வாய்ப்பு.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியல் புலத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு வகுப்புகள் நடைபெறும் கட்டிடம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் மற்றும் நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்கம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் என்எல்சியின் நிதி உதவியோடு சுரங்கவியல் பட்டயப் படிப்பு நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கவியல் பட்டயப்படிப்பில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுகளில் பயின்று பட்டயப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழில் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு சர்வேயர், சர்தார், ஓவர்மேன் ஆகிய பணிகளுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டப்படிப்பில் பயின்ற மாணவர்கள் 90க்கு மேம்பட்டவர்கள் என்எல்சியில் பணிபுரிய நியமன ஆணை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் 1985ம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 75 ஹெக்டேர் நிலப்பரப்பில் 450 படுக்கை வசதியுடன் துவங்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது 1200 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஏற்றது. இதனை தொடர்ந்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தனியார் மருத்துவக் கல்லூரியாகவே செயல்பட்டது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கி வருகிறது. இந்த கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கான மாணவர்களை பட்டதாரிகளாக்கிய தொலைதூரக் கல்வி இயக்ககம்.

குடும்பச் சூழல் மற்றும் ஏழ்மையின் காரணமாக பலருக்கு கல்வி எட்டாத கனியாக இருந்தது. இதனை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகம் 1979ம் ஆண்டு தொலைதூரக் கல்வி இயக்கத்தைத் துவக்கியது. மாணவர்கள் எளிதாக கல்வி பெற பல இடங்களில் தொலைதூரக் கல்வி மையங்களை நிறுவியது.இதனால் குக்கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கூட படித்து பட்டம் பெற்றனர். கடந்த 44 ஆண்டுகளில் பல லட்சம் மாணவர்கள் தொலைதூரக் கல்வி இயக்கத்தில் பயின்று பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் 500-க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்கியது. தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஆய்வு மையங்கள், கணினி பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தியது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், உயிர்தகவலியல், சட்டம், வணிகம், நிர்வாகம் ஆகியவற்றில் தொலைதூரக் கல்வி மூலம் முதுநிலை டிப்ளமா படிப்புகள் வழங்குகின்ற முதற்கல்வி நிறுவனமாக விளங்கியது. இந்நிலையில் தொலைதூரக் கல்வி இயக்ககம் கடந்த 2012ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைதூரக் கல்வி வழிபடுத்துதல் குழுவின் மேற்பார்வையில் இயங்கி வந்தது.கடந்த 2015ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி பாடத்திட்டங்கள் ஏற்புடையதல்ல என அறிவித்தனர். அதனால் 2015ம் ஆண்டு முதல் தொலைதூரக் கல்வியில் தடை ஏற்பட்டது. இருந்தாலும் கூட நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடந்த 2022ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் படிப்புகள் தொடரக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதனால் 2022-23ம்ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நடைபெறவில்லை.

மீண்டும் புத்துணர்வு பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம்.

பரபரப்பாக இயங்கி வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறாததால் அந்த வளாகமே வெறிச்சோடியது. இந்நிலையில் இந்த 2023-24 ம் ஆண்டு தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பட்டம் மற்றும் பட்டப் மேற்படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் முறையாக விண்ணப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகம் மானியக் குழுவின் வழிகாட்டுதல் குழுவினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து 2023-24ம் கல்வி ஆண்டுக்கு 27 பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானிய குழுவின் அனுமதி தேவையில்லை என்ற வகையில் தற்போது 97 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மொத்த 125 படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விற்பனை அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கத்தில் துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் புத்துணர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கத்தில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் விற்பனையை துணைவேந்தர் ஆர்‌.எம். கதிரேசன் தொடங்கி வைத்தார்.

2023-24ம் கல்வி ஆண்டில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 27 பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை.

2023- 24ம் கல்வியாண்டிற்கான அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கத்தில் 27 பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எம்.ஏ – தமிழ், எம்.ஏ-இங்கிலீஷ், எம்.ஏ-எக்கனாமிக்ஸ், எம்.ஏ-சோசியாலஜி, எம்.ஏ-பொலிடிகல் சயின்ஸ், எம்.ஏ-வரலாறு, மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க், எம்.காம்-கோ ஆப்பரேட்டிவ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்.சி-கணிதம், எம்எஸ்சி பிசிக்ஸ், எம்.எஸ்.சி-கெமிஸ்ட்ரி, எம்.எஸ்.சி பாட்டனி, எம்எஸ்சி ஜூவாலஜி, எம்எஸ்சி அப்ளை சைக்காலஜி,எம்.எஸ்.சி மைக்ரோ பயாலஜி,எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ்,எம்.எஸ்.சி யோகா, மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.பி.ஏ ஆகிய பட்ட மேற்படிப்புகளும் இசைத் துறையில் ஐந்து பட்டப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற முக்கிய பிரமுகர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கோகலே மண்டபத்திற்கு வருகை தந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தான் படித்த போது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

தமிழக அரசியல் அதிர்வுகளை எதிரொலிக்கும் கரமாக ஒரு காலத்தில் விளங்கியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அதன் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். திராவிட சிந்தனைகளை வளர்த்ததிலும் இப் பல்கலைக்கழகத்தின் பங்கு மகத்தானது. திராவிட இயக்க தலைவர்கள் பலர் உருவானது இங்குதான். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல முக்கிய பிரமுகர்கள் பயின்றுள்ளனர். இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமன் இங்கு படித்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன் திரைப்பட இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இங்கு படித்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டிடத்தின் நேர் எதிரே பிரம்மாண்டமான கட்டிடத்தில் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது நூலகம். இந்தியாவிலேயே நூலக நவீனப்படுத்துதலை செயல் வடிவம் கொடுத்த பல்கலைக்கழகங்களில் முதன்மையானது அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம். 5 லட்சத்துக்கு அதிகமான புத்தகங்களை கொண்டது இந்த நூலகம். இந்நூலகத்தில் அறிய பொக்கிஷமாக 2000-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளும் தமிழ் மொழி சான்றோர்கள் எழுதிய நூல்களின் முதல் படிப்பு மற்றும் கையெழுத்து பிரதிகளும் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய நூலக வளர்ச்சியின் தந்தை என்று கருதப்படுபவர் பேராசிரியர் எஸ்.ஆர். ரங்கநாதன். அவருடைய பெயரில் இயங்கும் இந்த நூலகத்தில் மாணவர்கள் அமர்ந்து அமைதியாக படிக்கக்கூடிய சூழலும், முதல் தளத்தில் கருத்தரங்குகள் நடத்தக்கூடிய அளவில் குளிரூட்டப்பட்ட அரங்கும் உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் இந்நூலகத்தில் இருந்து தினமும் நூல்களை எடுத்துச் சென்று படித்து பயனடைந்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி உரையாற்றிய கோகலே மண்டபம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள கோகலே மண்டபத்தில் ஏராளமான கருத்தாய்வு நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்தக் கருத்தாய்வு நிகழ்வுகளில் பல புகழ் பெற்ற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் முன்னாள் ஆளுநர் டாக்டர் அலெக்ஸாண்டர் போன்ற சான்றோர்கள் இங்கு நடந்த கருத்தாய்வு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 1942ம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தின் போது ஆசிரியர்கள்,மாணவர்களையும் சிதம்பரம் வாழ் மக்களையும் கோகலே மண்டபத்தில் சந்தித்து உரையாடியதாக கூறப்படுகிறது. தலை சிறந்த அரசியல்வாதிகள், நிர்வாகத்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் உருவாக பயிற்சி தளமாய் இந்த கோகலே மண்டபம் இருந்துள்ளது என்றால் மிகையாகாது. இதனை சமீபத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள திராவிட கழகத் தலைவர் கி‌.வீரமணி கோகலே மண்டபத்திற்கு வந்து அதனை பார்வையிட்டு மலரும் நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கடல்வாழ் உயிரியியல் உயராய்வு ஆராய்ச்சி மையம்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியியல் உயிராய்வு மையம்.

சிதம்பரம் அருகே 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரங்கிப்பேட்டை. இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியியல் உயராய்வு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு சமுதாயத்திற்கு நேரடியாக பயன்படும் பல துறைகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடல் உயிரினங்களில் இருந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரத்த உரைதலை தடுக்கும் ஹெப்பாரின் தயாரித்தல், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு வைரஸ் நோய்களையும், கொசுக்களையும் கட்டுப்படுத்த மருந்துகள் போன்றவற்றையும், சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏற்படும் பேரழிவுகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான ஆலோசனை வழங்கும் மையமாகவும் இந்த மையம் உள்ளது. மேலும் இந்த மையத்தில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு 1200 வகையான மீன்கள் பதப்படுத்தப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இதில் பல அதிசய மீன்களும் காணப்படுகின்றன. கடல் குதிரை, பறவை போல் பறந்து செல்லும் மீன்கள், தேள் மீன்கள்,பாட்டு பாடி திரியும் மீன்கள், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மீன்கள், அழகான வண்ணத்துப்பூச்சி மீன்கள் உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

யோகா படிப்புகளுக்கான மையம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள யோகா மையம்.

யோகக் கலையின் சிறப்பை உணர்ந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யோகக் கல்வியை 1964ம் ஆண்டு தொடங்கியது. இந்த மையம் 1998ம் ஆண்டு புது பொலிவாக்கப்பட்டது. இந்த யோகக் கல்வி மையத்தில் உடல் நலம், மனவளம், ஆன்மீக வளம் சார்ந்த பயிற்சி முறைகள் அளிக்கப்படுகின்றன. இந்த யோகப் பயிற்சி மையத்தில் பட்டயம், முதுகலை பட்டயம், முதுகலை பட்டய யோக சிகிச்சை, யோக முனைவர் பட்ட ஆய்வு போன்ற கல்வி முறைகள் போதிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் இந்த கல்வியாண்டு முதல் எம்.எஸ்.சி யோகா முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் உடற்கல்வியியல் துறை.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை மைதானம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள உடற்கல்வியியல் துறையில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.உடற்கல்வியியலில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகள் நடைபெறுகின்றன. உடற்கல்வியியல் துறை மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக மிகப்பெரிய விளையாட்டு மைதானம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களும் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் மாநில அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.