முட்செடி இழுத்தது! வானத்தில் கருடன் வட்டமிட்டது!! பல்கலைக்கழகம் மலர்ந்தது.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நுழைவு வாயில்

லட்டச்கணக்கான இளைஞர்களின் அறிவுக்கண்களை திறந்து கல்வி புரட்சி ஏற்படுத்திய அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவான கதை மிகவும் சுவாரசியமானது. தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே செட்டிநாடு புகைவண்டி நிலையத்தின் ஊடே கானாடுகாத்தான் என்ற புகழ்பெற்ற ஊர் உள்ளது. கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்ற ஊராகும். இவ்வூரில் திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து அப்பொருளை இறைவனுக்கு ஆலயம் அமைத்து மகிழும் தனவான்கள் பலர் உள்ளனர்.அம்மரபு வழி வந்த அண்ணாமலை செட்டியார் 1910ம் ஆண்டில் பிரிட்டனில் தங்கி கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார். அப்போது அவரது மனதில் இதுபோன்ற பல்கலைக்கழகத்தை நம்மூரில் அமைத்தால் என்ன என மனதில் நினைத்துள்ளார். ஊருக்கு திரும்பியதும் கல்வியால் தான் சமுதாயத்தில் வளர்ச்சி ஏற்படும் என கருதி கல்லூரி ஒன்றை துவங்க திட்டமிட்டார்.

ராஜா சர் அண்ணாமலை செட்டியார்

கருடன் வட்டமிட நல்ல சகுனம்

இந்நிலையில் அண்ணாமலை செட்டியாரும், அதே ஊரை சேர்ந்த மாரி பெத்தபெருமாள் செட்டியாரும் தில்லைக் கூத்த பெருமானை தரிசிப்பதற்காக சிதம்பரம் வருகை தந்தனர். சிதம்பரத்தில் அருள் பாலித்து வரும் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் சிதம்பரம் கிழக்கு பகுதியில் திருவேட்களம் என்ற பாடல் பெற்ற தலத்திற்கு சென்றனர். அங்குள்ள பாசுபதேஸ்வரை வழிபட்டு விட்டு அதனை சுற்றியுள்ள நிலப்பரப்புகளை பார்த்த போது அண்ணாமலை செட்டியார் பெத்த பெருமாளிடம் இவ்விடத்தில் தமிழ்க்கல்லூரியொன்று அமைக்க என் உள்ளம் விரும்புகிறது என்று கூறினாராம். மூங்கில் மரங்கள் வளர்ந்து, முட்புதர்கள் நிரம்பிய பள்ளப்பகுதியாக காட்சியளித்ததால் மனதில் தயக்கம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து புறப்பட முற்பட்ட போது ஏதோ ஒன்று தன் அங்கியை பிடித்து இழுப்பது போல் உணர்ந்து திரும்பி பார்த்த போது முட்செடியில் அவரது ஆடை சிக்கியதை அறிந்தார். அப்போது வானத்தில் இரு கருடன்கள் வட்டமிட்டன. இதனைப் பார்த்த அண்ணாமலை செட்டியார் நல்ல சகுனமாக தெரிகிறது என கருதி இந்த இடத்திலேயே கல்லூரி அமைக்க உறுதி செய்து அவர் பெத்தபெருமாளிடம் நான் இந்த இடத்தில் கல்லூரி அமைக்கின்றேன். நீ திருவேட்களம் பகுதியில் உள்ள இந்த கோயிலை கற்கோயிலாக கட்டு என்றாராம். இது குறித்து ஊர் மக்களை அழைத்து உங்கள் சந்ததியினரின் நலன் கருதி செயல்படுகின்றோம். தேவையான வசதிகளை செய்து தருவீர்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். இதனைடுத்து ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்போடு அந்த இடத்தில் கல்விக்கோயிலை நிறுவினார். அண்ணாமலை செட்டியார். மாரி பெத்த பெருமாள் செட்டியார் அங்கிருந்த கோயிலை கற்கோயிலாக நிறுவியதாக கூறப்படுகிறது. இப்படிதான் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவானதாக கருதப்படுகிறது.1920ம் ஆண்டில் அண்ணாமலை செட்டியார் தனது தாய் மீனாட்சி பெயரில் கல்லூரியை துவக்கினார். பின்னர் அது அண்ணாமலை பல்கலைக்கழகமாக மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்

மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டத்தில்,ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவியகொடை வள்ளலான அண்ணாமலை செட்டியாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ராஜா பட்டம் வழங்கி கௌரவித்தது. இதனையடுத்து அவர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என அனைவராலும் அழைக்கப்பட்டார். தமிழ் வளர்ச்சிக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆற்றிய பங்கு அளப்பரியது. மதுரையில் தமிழ்ச்சங்கம், சென்னையில் தமிழ்ச்சங்கம், தமிழ் வளர்ப்பதற்காக அண்ணாமலை மன்றம் என்ற பெயரில் கட்டிடங்கள் என இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு பல தமிழ்ச் சேவை ஆற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.