தில்லை, புலியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த தலம்தான் `ஸ்ரீஅனந்தீஸ்வரர்’ கோயில். இந்த கோயில் சிதம்பரம் நடராஜர் கோயிலை விட மிகப் பழமைவாய்ந்த கோயில் என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இக் கோயிலில் மூலவர் ஸ்ரீ அனந்தீஸ்வரர், பின்னால் நாகத்துடன் காட்சியளிப்பார். தனி சந்நிதியில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயில் தினமும் காலை 6:00 மணி முதல் 11:30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8:30 வரையிலும் திறந்திருக்கும்.
சிவபெருமானின் நடனத்தை காண தில்லை வந்த பதஞ்சலி!
ஒரு காலத்தில் திருமாலின் படுக்கையாகிய ஆதிசேடன் திருமாலின் பேரானந்த நிலைக்கு காரணமாக அமைந்தது சிவபெருமானின் கூத்தேயாகும் என்பதை அவரிடம் கேட்டறிந்தார். தானும் தில்லை திரு நடனத்தைக் காண வேண்டி அத்திரி முனிவருக்கும் அனசுயைக்கும் மகனாய் தோன்றி பாதி மனித உருவமும், பாதி பாம்பு வடிவமும் கொண்டு தில்லை வந்தார். பாதி உடல் பாம்பு வடிவமும், பாதி மனித உடல் பெற்று குழந்தையாக பாதத்தில் தவழ்ந்ததால் பதஞ்சலி என பெயர் பெற்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதருக்கு நண்பராகி தில்லையில் திருமூலட்டநாதரை(ஆதிமூலநாதரை) வழிபட்டு வந்தார்.
தில்லையின் மேற்கு திசையில் நாகச்சேரி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கீழ்கரையில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து ஆன்மார்த்த மூர்த்தியாக நாள்தோறும் வணங்கி மகிழ்வுற்றார். இந்நிலையில் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாத முனிவர் ஆகியோரின் பேரன்பிற்கு உளமுவந்த சிவபெருமான் தைப்பூச திருநாளில் நண்பகலில் திருச்சிற்றம்பலத்திலேயே நடராஜபெருமானாகச் சிவகாமி அம்மையுடன் தோன்றித் ஆனந்த நடனமாடி தரிசனம் வழங்கியருளினார். அம்பலவனின் அருள்நடனக் காட்சி பெற்றதை பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக என்ற திருவாசக வரியால் இதனை அறியலாம். அனந்தனாகிய பதஞ்சலி முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட இறைவன் இங்கு எழுந்தருளியிருப்பதால் இக்கோயில் அனந்தீஸ்வரன் கோயில் என்றும் இறைவனுக்கு அனந்தீஸ்வரர் என பெயர் பெற்றது. இக்கோயில் முன்பு அனந்த தீர்த்தக் குளம் உள்ளது. இக்குளம் சிதம்பரத்தில் உள்ள தச தீர்த்தங்களில் ஒன்றாகும்.
யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி!
பதஞ்சலி முனிவர் அனுக்கிரக மூர்த்தியாக இக்கோயிலில் காட்சி தருகிறார். கருங்கல்லாலான பெரிய திருக்கோயிலாக இந்த கோயில் விளங்குகிறது. பெருமாள் ராமாவதாரம் எடுத்தபோது, லட்சுமணராக அவதாரம் செய்தவர் பதஞ்சலியே ஆவார்.
இவரது நட்சத்திரம் பூசம் என்பதால், இந்நாளில் விசேஷபூஜை நடக்கிறது. மார்கழி திருவாதிரையன்று நடராஜருடன் பதஞ்சலி முனிவரும் புறப்பாடாவார். யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி என்பதால், யோகாசனக் கலையில் தேற விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து கூட இங்கு வந்து யோகக் கலையைக் கற்க பதஞ்சலி முனிவரை வணங்கிச் செல்கிறார்கள்.
நாக தோஷம் நீங்க வணங்க வேண்டிய கோயில்!
இந்த கோயிலிலுள்ள சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர். இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறமாக மேற்குப் பக்கம் அமைந்த கோயில் இது. கோயில் தீர்த்தக் குளத்தின்
இடப்புறம் ராஜ சண்டிகேஸ்வரர் இருக்கிறார். ராஜயோகம் கிடைக்க இவரையும், செல்வம் பெருக அருகிலுள்ள வடக்கு நோக்கிய விநாயகரையும் வணங்குகின்றனர். பிரகாரத்தில் அருகருகில் சூரியன், சந்திரன் உள்ளனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பிதுர்தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்கு சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர்.
உச்சி காலத்தில் ஆனந்தீஸ்வரரை வணங்குவது சிறப்பு!
திருவாரூர் தவிர, உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலுள்ள சுவாமிகளும், சிதம்பரத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் அர்த்தஜாம பூஜை (இரவு 10 மணி) மிகவும் விசேஷம். இப்பூஜையை தினமும் அனைத்து முனிவர்களும் வந்து தரிசிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தினமும் உச்சிக் காலத்தில் இங்கு அனந்தீஸ்வரரை தரிசனம் செய்வதாக தல வரலாறு சொல்கிறது. எனவே, உச்சிக் காலத்தில் இத்தலத்தையும், அர்த்தஜாமத்தில் சிதம்பரம் நடராஜரையும் தரிசிப்பது விசேஷம். இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாட்களில் இவர் புறப்பாடாவார்.கோயில் முன் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர் தலைக்கு மேலே வாலை வைத்து வணங்கிய படி காட்சி தருகிறார். பிரகாரத்தில் கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகம், பைரவர் உள்ளனர். சிவன் சந்நதி கோஷ்டத்தில் வல்லபகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது!
இக்கோயிலில் ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, கந்தர் சஷ்டி, தை மாதம் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி ஆகியவற்றை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும், பதஞ்சலியை வணங்குகின்றனர். ராஜயோகம் கிடைக்க சண்டிகேஸ்வரையும், செல்வம் பெருக விநாயகரையும் வணங்குகின்றனர். முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பிதுர் தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்குள்ள சிவனையும், சூரிய, சந்திரரையும் வணங்குகின்றனர். வாழ்வில் மங்கலம் உண்டாக, கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமைய இங்குள்ள அஷ்ட புஜ துர்க்கயை வேண்டிக் கொள்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்புப் பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இந்த கோயிலில் பிரசாதமாக தயிர் சாதம் மட்டுமே நிவேதனமாக செய்யப்படுகிறது.