ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் கோவில்.


பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்.

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எம பயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தர்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்பிகை ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர். தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடமிருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

திருக்கடவூர் மருவி திருக்கடையூர் ஆனது.

பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் நுழைவு வாயில் ‌

ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் முன்பு திருக்கடவூர் என்ற அழைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இப்பெயர் மருவி திருக்கடையூர் ஆனது. தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் இக்கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 47வது ஆலயம் இது. இக்கோவில் திருக்கைலாயப் பரம்பரைத் தருமபுர ஆதீனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீராட்டானத்தில் எட்டாவது வீராட்டனமாக திகழ்வது இத்தலத்தின் தனி சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல் பெற்ற தலமாக திகழ்கிறது. ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் மேற்கு நோக்கி அமையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இக்கோவில் 51 சக்தி பீடங்களில் கால சக்தி பீடமாக திகழ்கிறது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை தலவிருட்சமாக கொண்டுள்ளது. தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது. இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் லிங்கமானது சுயம்புவாக தோன்றியது. இங்கு வீற்றிருக்கும் மூலவர் ஒரு லிங்கமாக இருந்தாலும் உற்றுப் பார்க்கும் போது மற்றொரு லிங்கம் பிம்பமாக நம் கண்களுக்கு புலப்படும் என்பது இந்த கோவிலின் தனி சிறப்பாகும்.அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிட்டும் என கூறப்படுகிறது.

திருக்கடையூர் கோவில் தல விருட்சம் காசி பிஞ்சிலம் மரம்.

திருக்கடையூர் கோவில் வரலாறு

மிருகண்டு முனிவர் மற்றும் அவருடைய மனைவி புத்திர பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர்.அவர்களின் பக்தியை மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துற்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா? என்று கேட்க மிருகண்டு தம்பதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் மகன் பிறந்தான். மகனுக்கு மார்க்கண்டேயேன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். அவர் சிறந்த சிவபக்தனாக விளங்கினார்.அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயனிடம் கூறினார்கள். சிவபெருமானே தன்னுடைய ஆயுளை காக்க முடியும் என்று மார்க்கண்டேயன் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் பொழுது கடைசியாக திருக்கடவூர் என்றழைக்கப்படும் திருக்கடையூர் வந்து சேர்ந்தார்.அவர் திருக்கடையூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுட்காலம் முடியும் நாள் நெருங்கியது. அங்கு எமதர்மன் தன் பணியை முடிக்கும் பொருட்டு மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினார். எமதர்மனை கண்ட அச்சமுற்ற மார்க்கண்டேயன் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத்தழுவி கொண்டார். எமதர்மனும் பாச கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினார்.இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனை காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு எமதர்மனை சூலாயுதத்தால் அழித்து காலனுக்கு, காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான் எமனை உயிர்ப்பித்து அருள்புரிந்தார் என்று தலபுராணம் கூறுகிறது.

தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு எமதர்மனை சூலாயுதத்தால் சிவபெருமான் தாக்குதல் நடத்துவது போன்ற ஓவியம் தத்ரூபமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வரையப்பட்டுள்ளது.

வில்வ விதை ஒரு நாழிகைக்குள் மரமாக வளர்ந்து நின்றது.

ஒரு சமயம் பிரம்மா சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெற வேண்டி கைலாயம் சென்றார்.அப்போது சிவன் அவரிடம் வில்வ விதைகளை கொடுத்து கொடுத்து பூலோகத்தில் விதைக்க அறிவுறுத்தினார். விதைக்கப்பட்ட விதை ஒரு நாழிகைக்குள் எங்கு மரமாக வளர்கிறதோ அவ்விடத்தில் ஞான உபதேசம் செய்வதாக கூறினார். பிரம்மாவால் விதைக்கப்பட்ட வில்வ விதையானது திருக்கடையூர் தலத்தில் ஒரு நாழிகைக்குள் மரமாக வளர்ந்து நின்றது. அதன்படி பிரம்மா அங்கு சிவனை வணங்கினார். இதனை அடுத்து சிவபெருமான் பிரம்மாவிற்கு ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.

அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கும் என ஐதீகம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலின் அழகிய தோற்றம்.

தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடமிருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர். இக்கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது. இக்கோவிலில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலே கோவிலில் புலத்தியர் வணங்கிய புண்ணியசகரேஸ்வரர் என்கிற புண்ணிய வர்த்தனர் சன்னதி உள்ளது.இவர்களை வணங்கிய பின்பே மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது ஐதீகம் இவர்களை வணங்கும்போது பாவங்கள் நீங்கி புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. சித்தர்கள் பலர் வழிபாடு செய்த தலம் இது. அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆகும்.

திருக்கடையூர் கோவிலில் உள்ள புண்ணியவர்த்தனர் சன்னதி.

50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கானப்படும் கோவில்.

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தையும்,ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் செப்பணிட்டு, சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். முதலாம் ராசராஜன் முதல் மூன்றாம் ராஜராஜன் வரை பல சோழ மன்னர்கள் பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளது கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகர பாண்டியனாகிய மூவரின் கொடைத்தன்மையை இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

சிதம்பரம் ரகசியம் போல திருக்கடையூர் ரகசியம்.

சிதம்பர ரகசியம், திருவாரூர் ரகசியம் ஆகியவற்றை போல திருக்கடையூரிலும் ரகசியம் உள்ளது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் நடராஜரின் அருகில் உள்ள வெட்ட வெளியில் தங்கத்தினால் ஆன வில்வமாலை தொங்கவிடப்பட்டிருக்கும். ஒன்றுமில்லாத அந்த அம்சம் தான் சிதம்பர ரகசியம் எனப்படுகிறது.ஆனால் திருக்கடையூர் ரகசியம் என்பது ஆயுளை அதிகரிக்க செய்வதாகும். ஆமாம் இக்கோவிலில் கால சம்ஹாரமூர்த்தி சன்னதிக்குள் சுவாமிக்கு வலது புறத்தில் உள்ள மதிலில் ஒரு எந்திர தகடு பதிக்கப்பட்டுள்ளது. இதனை திருக்கடையூர் ரகசியம் என்கிறார்கள். ஆகையால் திருக்கடையூர் கோவிலில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதியில் உள்ள பாபஹரேஸ்வரரை தரிசித்து விட்டு திருக்கடையூர் ரகசியத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். பாபஹரேஸ்வரரை வணங்கினால் பாவங்கள் போக்கப்படும் என்றும் திருக்கடையூர் ரகசியத்தை கண்டு தரிசித்தால் ஆயுள் அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

கள்ள விநாயகர்.

திருக்கடையூர் கோவிலில் அருள்பாலிக்கும் கள்ள விநாயகர்.

எந்த ஒரு சுப காரியத்தையும் முதலில் விநாயகரை வழிபட்டு செய்துவிட்டு தான் அனைத்து வழிபாடுகளும் சுப காரியங்களும் நடைபெறும். அப்படி விநாயகர் வழிபாடு செய்யாவிட்டால் எந்த சுப காரியமும் ஏதோ ஒரு வகையில் தடைபடும். முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர்.இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும் இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறியதால் இக்கோவில் அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு இக்கோயிலில் தனி சன்னதியில் கோவிலில் அருள்பாலித்து வருகிறார்.

சிவலிங்க திருமேனியில் பாசக் கயிற்றின் தடம்.

மார்க்கண்டேயன் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை இருகப்பற்றி வழிபட்டபோது எமன் தனது பாசக்கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீச பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு சேர்ந்து சிவபெருமானையும் இருக்கியது. இதனால் சினம் கொண்ட சிவபெருமான் லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு எமதர்மனை தனது காலால் உதைத்து தள்ளினார். எமதர்மன், சிவபெருமான் மீது வீசிய பாசக்கயிற்றின் தடம் தற்போதும் சிவலிங்கத் திருமேனியில் உள்ளது. அமிர்தகடேஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடக்கும்போது இந்த பாசக்கயிற்றின் தடத்தை காணலாம்.

சஷ்டியப்தபூர்த்தி பூஜை.

திருக்கடையூர் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அபிராமி அம்மன்.

59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உட்கரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயது தொடங்குபவர்கள் பீமா ரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜய ரத சாந்தி பூஜையையும் செய்கின்றனர்.81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்தகடேஸ்வரரை வழிபடுகிறார்கள்.கோவிலின் மேற்கு திசை நோக்கி அமிர்தகடேஸ்வரரும், கிழக்கு திசையில் தனி கோவிலில் அபிராமி அம்மனும், அமிர்தகடேஸ்வரர் அருகில் காலசம்ஹாரமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். உள்பிரகாரத்தில் முருகன், மகாலட்சுமி, நடராஜர் ஆகியோரும் அருள்பாலித்து வருகின்றனர்.கோவிலின் பின்புறமுள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கங்கை தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரை கொண்டு தான் இன்றும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் நடக்கிறது.

சங்காபிஷேகம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள காரசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.கார்த்திகை சோமவார நாட்களில் இந்த கோவிலில் 1008 சங்குகளை வைத்து நடைபெறும் சங்காபிஷேக விழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் பங்குனி அசுவதி நட்சத்திர தீர்த்தவாரி விழாவும் தற்போது வரை பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

திருக்கடையூர் கோவிலுக்கு செல்வது எப்படி?

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இருந்து கருவி, ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில்,ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம்‌ சென்னையில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து திருக்கடையூர் அமிர்தகரேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்ப பக்தர்கள் ரயில் மூலம் மயிலாடுதுறையை அடைந்து திருக்கடையூர் கோவிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அபிராமி அந்தாதி அருளச் செய்த தலம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு வேண்டியதை வேண்டியபடி அருளும் கற்பக விருட்சமாக அன்னை அபிராமி அருள்பாலித்து வருகின்றார். சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவர் அன்னை அபிராமியே. இவ்வூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம் ஒருமுறை தஞ்சை இரண்டாம் சரபோஜி மன்னர் திருக்கடையூர் வந்தபோது இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்டுள்ளார். அன்னை நினைவிலேயே இருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறுதலாக கூறி விடுகிறார். பட்டரைப் பற்றி தவறான கருத்துக்களை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். இதனால் கோபமற்ற மன்னர் அன்று இரவு பௌர்ணமியை காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை மீது நூறு பாடல்கள் கொண்ட அபிராமி அந்தாதி பாட அமாவாசை அன்று பௌர்ணமி தோன்றியது. 79வது பாடலின் போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூரண சந்திரனாகக் காட்சியளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த அன்னை அபிராமி தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் இருள் நீக்கி ஒளியேற்றி அவர்கள் வேண்டியது எல்லாவற்றையும் அருள் புரிகிறார். இத்தலத்தில் அம்மையும், அப்பனும் நேருக்கு நேர் சன்னதி கொண்டிருக்கிறார்கள். மூலவர் அமிர்தகடேஸ்வரர் மேற்கே பார்த்தும், அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமையப்பெற்றதால் இத்தலம் நித்திய திருக்கல்யாண தலமாக திகழ்கிறது.

திருக்கடையூர் கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்பாள் சன்னதிக்கு செல்லும் வழி.

கோவில் திறந்திருக்கும் நேரம்

இக்கோவில் தினமும் காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு பகல் ஒரு மணி வரையிலும், மீண்டும் மாலை நாலு மணிக்கு திறக்கப்பட்டு இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்திருக்கும். காலை 6.00 மணிக்கு உஷாக்கால பூஜையும், காலை 9.00 மணிக்கு காலசந்தி பூஜையும், பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 9.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது.

காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எம பயம் நீங்கும்.

திருக்கடையூர் கோவிலின் உள் தோற்றம்.

திருக்கடையூர் கோவிலில் அமிர்தகடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி கிட்டும்.தொழில் விருத்தியடையும், பதவி உயர்வு கிட்டுவதுடன் நோய் நொடிகள் நீங்கி ஆயுள் விருத்தி தரும். இக்கோவிலில் உற்சவர் காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். காலசம்ஹார மூர்த்தி குறித்து திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில் 134 இடங்களில் பாடியிருக்கிறார்.ஏராளமான சித்தர்கள் இங்க வந்து அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுள்ளனர். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். தினமும் கோயிலில் சாயரட்சை பூஜை நடக்கும் போது மட்டும் ஆதி வில்வநாதருக்கு முதல் பூஜை செய்யப்படுகிறது.அந்த சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்க சென்ற குகை பாதை உள்ளதாக சொல்கிறார்கள். இத்தலத்தில் 63 நாயன்மார்கள் இடம்பெற்றுள்ள குங்கிலிய நாயனார் மற்றும் காரி நாயனார் ஆகியோர் அருள் பெற்று சிவதொண்டு மேற்கொண்ட தலம் இதுவே.

கார்த்திகை சோமவாரத்தில் இறைவனுக்கு 1008 சங்கு அபிஷேகம்.

திருக்கடையூர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சன்னதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அச்சமயத்தில் மட்டும் இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். எமன் வீசிய பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத்தின் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்து தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாக தெரியும். அதே போல முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்பு சிலை வடிவமும், சிவலிங்கம் இரண்டாக பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்துரூபமாக அமைந்துள்ளது.

தை அமாவாசையில் நிலவு காட்டி வழிபடுதல்.

திருக்கடையூர் கோவிலில் சித்திரை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் எம சம்ஹார விழா சிறப்பாக நடைபெறும். 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவின் ஆறாம் நாள் அன்று காலசம்ஹார மூர்த்தி ஒரே ஒரு முறை மட்டும் வெளியே வலம் வருவார். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா மார்கழி மாதம் வியதீபாதம் (மிதிபாதம்)அன்று ஏக தின உற்சவம் ஆகியவை கோவிலில் சிறப்பாக நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் கோவிலில் கந்தசஷ்டி, மகா சிவராத்திரி,பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தை அமாவாசை அன்று அபிராமி அந்தாதி பாராயணம் செய்து பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேஷம்.மாதாந்திர பிரதோஷ நாட்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். விசேஷ நாட்களான தீபாவளி பொங்கல் தமிழ், ஆங்கில புத்தாண்டு ஆகிய தினங்களில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.