ஆடிப்பெருக்கென்று சோழ நாட்டு நதிகலெல்லாம் வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக்கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது வழக்கம். “வடகாவேரி” என்று பக்தர்களாலும், “கொள்ளிடம்” என்று பொதுமக்களாலும் பெயரிடப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணன் ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் கல்கியால் ஆடிப்பெருக்கு விழா குறித்து அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் தமிழர்களின் வாழ்வியலில் மிக சிறந்த மாதமாகும். தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமிதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் சொல்லுகின்றன.ஆடி மாதம் தொடங்கினாலே தமிழகத்தில் திருவிழாக்களால் களைக்கட்ட தொடங்கிவிடும். தெய்வீகம் பொருந்திய ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை உள்ளிட்ட பல்வேறு விசேஷங்கள் நிறைந்துள்ளதால் மக்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கக்கூடிய அருமையான மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது.ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிகவும் விசேஷமானது. ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.ஆறுகளில் புதிய நீர் வந்து பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் பண்டிகையாக ஆடிப்பெருக்கு தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
நீரை தெய்வமாக வழிபடும் விழா ஆடிப்பெருக்கு விழா.
நீரை தெய்வமாக வழிபடும் விழா ஆடிப்பெருக்கு விழா. பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும். அப்படி பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி நீரை வரவேற்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் ஆற்றங்கரை ஓரங்களில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.சிதம்பரம் அருகே வல்லம்படுகை பகுதியில் பொன்னியின் செல்வன் நாவலில் ‘பொன்னி நதி’என்று வர்ணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்தக் கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பெருக்கென்று திரண்டு வந்து காவிரி நீரை வரவேற்று படைத்து வழிபடுவது வழக்கம்.
ஆடிப்பட்டம் தேடி விதை
கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் பெண்கள் தலைவாழை இலையிட்டு தேங்காய் பழங்கள், தாம்பூலம், மஞ்சள்,குங்குமம், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவேரி தாய்க்கு படைத்து வணங்கி வழிபடுவார்கள். புதுமண தம்பதிகள் தாலிக்கயிற்றை மாற்றி தம் வாழ்க்கை சுபமாக அமைய வேண்டிக் கொள்வார்கள். திருமணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டுவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என முன்னோர்கள் சொல்வது வழக்கம்.விவசாயிகள் ஆடிப்பெருக்கென்று விதைத்தால் தான் தை மாதம் அறுவடை செய்ய முடியும் என்று கருதி ஆடி பெருக்கன்று காவிரி நீரை வழிபட்டு விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்குவார்கள். தொட்டதெல்லாம் பல மடங்கு பெருகும் புண்ணிய தினமான ஆடிப்பெருக்கு தினத்தில் பூமித்தாயையும், காவிரித் தாயையும் வழிபட்டுப் பேறு பெறுவோம்.