ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெற்றது போல் தேசபக்தியிலும் சிதம்பரத்திற்கு தனி இடமுண்டு. சிதம்பரம் அருகே கீழ மூங்கிலடி கிராமத்தில் இருந்த காந்தி ஆசிரமத்திற்கு காந்தியடிகள் வந்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதேபோன்று சிதம்பரத்தில் நந்தனார் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய சுவாமி சகஜானந்தா 1934 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி காந்தியடிகளை அழைத்து வந்து சிதம்பரம் ஓமகுளம் பகுதியில் அவரது திருக்கையினால் சிவலோகநாதர் சிவாலயத்திற்கு அடிக்கல் நாட்ட செய்து பெருமை சேர்த்துள்ளார்.தற்போது அந்த பழமை வாய்ந்த கோயில் கருங்கல் கோயிலாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் வாகீசன் நகரில் 1956 ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களால் சிதம்பரத்தில் காந்தி மன்றம் தோற்றுவிக்கப்பட்டு காந்தி மன்றம் அன்று முதல் இன்று வரை பல்வேறு சமுதாயப் பணிகளை ஆற்றி வருகிறது. சிதம்பரத்தில் பல சுதந்திரப் போராட்ட தியாகிகள் வசித்து வந்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில்!
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் மேற்கு கோபுரவாயில் மண்டபத்தில் நமது பாரத நாடு குடியரசு ஆனதை கல்வெட்டாக பொறித்து வைத்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கோயில் கிழக்கு கோபுர உச்சியில் தேசியக் கொடி ஏற்றி வைத்து தங்களது தேசபக்தியை தீட்சிதர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். 75 ஆண்டுகளை கடந்து 76 வது சுதந்திர தின விழாவை நாடு கொண்டாடிக் கொண்டாடி கொண்டிருக்கின்ற வேளையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று காலை 7:00 மணியளவில் கோயில் பொது தீட்சிதர்கள் தேசியக்கொடியை ஒரு வெள்ளி தட்டில் வைத்து நடராஜர் சன்னதிக்கு எடுத்துச் சென்று அங்கு படைத்தனர். பிறகு தேசியக் கொடியை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கீழ கோபுர வாயிலுக்கு சென்றனர். பின்னர் தீட்சிதர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் 142 அடி உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்கு சென்று தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதனை தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தீட்சிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.