சிதம்பரமாக மாறிய தில்லைவனம்.


ஆதிகாலத்தில் சிதம்பரத்தில் தில்லை என்ற ஒரு வகை மரம் நிறைந்து வனமாக இருந்ததால் தில்லை வனம் என பெயர் பெற்றது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த தில்லை மரம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் தலவிருட்சமாக உள்ளது. சிதம்பரம் பகுதியில் தில்லை மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டதால் ஊர் பெயரே தில்லை என பெயர் பெற்றது. பின்னர் இந்த ஊர் சித்-அம்பரம் என்பது மருவி சிதம்பரமாகியது. சித் என்றால் அறிவு, அம்பரம் என்பது வெட்டவெளி. இதனால் நாளடைவில் தில்லை என்ற ஊர் சிதம்பரமானதாக வரலாறு கூறுகின்றது. ஆனால் சிதம்பரத்தில் ஒரு காலத்தில் காடு போல் வளர்ந்திருந்த தில்லை மரங்கள் இன்று பெயர் அளவில் கூட காணப்படவில்லை. ஆனால் தற்போது சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் கடலோரத்தில் உள்ள சுரப்பண்ணை காடுகளின் இடையே தில்லை மரங்கள் ஊடுருவி காட்சியளிக்கின்றன.

மருத்துவ குணம் வாய்ந்த தில்லை மரம்.

தில்லை என்ற தாவரம் புதர் செடி வகையை சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் Excoecaria agallocha Linn. என்பதாகும். Euphorbiaceae என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.இது ஒரு பால் வடிக்கும் தாவரமாகும். இதனுடைய பால் போன்ற திரவம் கண்ணில் பட்டால் பார்வை பறிபோகும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இது உடலில் தோளில் பட்டால் தடிப்பும், எரிச்சல் உண்டாக்கும் அபாயம் உள்ளதாக தாவரவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தில்லை மரம் 14 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் தண்டின் மேல் கணுவுக்கு ஒன்றாக மாறி மாறி அமைந்து அடியும்,நுனியும் குறுகிய முட்டை போன்ற வடிவம் கொண்டவை. இலைகளின் மேற்பரப்பு வழவழப்பாகவும் விளிம்பு சற்று வளைவான பற்களுடனும் கூடியுள்ளன. இத்தாவரத்தின் மரப்பட்டையின் புகையினை தொழு நோய்க்கு நிவாரணமாக பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது தாவரத்தின் உள்ள மூலப்பொருட்கள் எய்ட்ஸ் மற்றும் புற்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் கோயிலின் தலவிருட்சமாக கருதப்படும் தில்லை மரம் தற்போது சிதம்பரம் பகுதியில் வளரவில்லை. காலப்போக்கில் இம்மரம் வளரும் சூழ்நிலை மாறி இருக்கலாம் என கருதப்படுகிறது ‘கழிசூல்தில்லை’ என வரும் திருமுறைத் தொடரால் முற்காலத்தில் தில்லைநகர் கடல் அருகே இருந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுரப்பனை காடுகள் இடையே ஊடுருவி வளர்ந்துள்ள தில்லை மரம்.