சிதம்பரத்தில் தரிசிக்க வேண்டிய கோயில்கள்


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்

கோயில் என்றாலே அது சிதம்பரத்தை தான் குறிக்கும். பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக (Aether)விளங்குவது சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில். இங்கு நடராஜபெருமான் ஆனந்த தாண்டவ கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதே கோயிலில் மற்றொரு புறத்தில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகின்றார். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக  நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில் நின்று நடராஜரையும், பெருமாளையும் வழிபடலாம். சிதம்பரம் சென்றால் நடராஜரையும், பெருமாளையும் வழிபட்டு விட்டோம் என்று கிளம்பி விடாதீர்கள். சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான பாடல் பெற்ற தலங்களும், பிற கோயில்களும் உள்ளன. இதில் பல கோயில்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

தரிசிக்க வேண்டிய மற்ற கோயில்கள்.

நடராஜர் கோவிலை தரிசித்து விட்டு கோயிலின் வடக்கு கோபுர வாயில் வழியாக வெளியே வந்தால் உங்களை தில்லைக் காளியம்மன் கோயில் அலங்கார வளைவு வரவேற்கும். அதன் வழியாக சென்றால் ஸ்ரீ நடராஜ பெருமானுடன் ஆடலில் போட்டியிட்டு எல்லையில் அமர்ந்து அருள் புரிந்து வரும் ஸ்ரீ தில்லைக் காளியம்மனையும், நான்கு முகங்களை கொண்ட ஸ்ரீ பிரம்ம சாமுண்டீஸ்வரி அம்மனையும் தரிசனம் செய்யலாம். தில்லைக் காளியை மனம் உருகி வேண்டினால் தீவினைகள் அகலும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இக்கோயிலின் அருகே உள்ள வேங்கான் தெருவில் மாணிக்கவாசகர் தங்கி வழிபட்டு வந்த ஆத்மநாதர் கோயில் உள்ளது. ஆத்மநாதரை வழிபட்டால் மன அமைதி கிட்டும். சிதம்பரம் மேற்கு பகுதியில் காசுக் கடைத்தெரு அருகே பழமை வாய்ந்த இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் கணவன்,மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.  இந்த கோயிலின் அருகிலேயே மின்வாரிய அலுவலகம் செல்லும் வழியில் புகழ்பெற்ற ஸ்ரீ அனந்தீஸ்வரர் கோயில் உள்ளது. பதஞ்சலி முனிவர் வழிபட்ட இக்கோயிலை தரிசித்தால் நாக தோஷம் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

சிதம்பரம் புறவழிச்சாலை அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில். மறைஞான சம்பந்தர் தங்கி வழிபட்ட இத்தலத்தை தரிசித்தால் பாவங்கள் நீங்கும் என கூறப்படுகிறது. சிதம்பரத்தை அடுத்துள்ள அண்ணாமலை நகர் திருவேட்களம் பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பாசுபதேஸ்வரர் கோயில். இங்குள்ள ஈசனை வழிபட்டால் நினைத்ததெல்லாம் கை கூடும் என கூறப்படுகிறது. சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ளது உச்சிநாதர் கோயில். கன்வ முனிவர் வழிபட்ட  இத்திருத்தலத்தை வழிபட்டால் குழந்தை பேரு உண்டாகும் எனக் கூறப்படுகிறது. இக் கோயிலின் அருகே பால்வண்ணநாதர் கோயில் உள்ளது. வால்மீகி முனிவர் வழிபட்ட இத் தலத்தை தரிசித்தால் செல்வம் கைகூடும். இக்கோயிலில் காலபைரவர் வழிபாடு மிகச் சிறப்பானதாகும்.