பேராசிரியர் பெயர் சூட்டப்பட்ட புதிய வகை நண்டு!


புதியதாக அடையாளம் காணப்பட்ட நண்டுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஒரு பேராசிரியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது அல்லவா?

அரிசி மணியை விட சிறிய நண்டு வகை கண்டறியப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் அகத்தி தீவின் பவளப் பாறை (coral reef) சூழலிலிருந்து, அரிசி மணியை விட சிறியதாக சுமார் 3 மில்லிமீட்டர் அளவுள்ள ஒரு புதிய நண்டு இனம் கண்டறியப்பட்டுள்ளது. லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில்  அகத்தி தீவும் ஒன்றாகும். இத்தீவு பவளப் பாறைகளைக் கொண்டதாக இருப்பதுடன், பல்வேறு கடல் உயிரினங்களுக்கு பாதுகாப்பான வாழிடமாக செயல்படுகிறது. புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த சிறிய நண்டு கலாத்தியா (Galathea) எனும் இனத்தைச் சார்ந்தது. இவ்வினத்தைச் சேர்ந்த நண்டுகள் “ஸ்குவாட் லாப்ஸ்டர்” (squat lobster) என பொதுவாக அழைக்கப்படுகின்றன. சிறிய லாப்ஸ்டர்களைப் போன்ற தோற்றமுடைய இவை, பவளப்பாறைகளுக்கு இடையில் மறைந்து வாழும் திறன் கொண்டவை. கரிமப் பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம், பவளப் பாறை சூழலின் சமநிலையை பேணுவதிலும், மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களுக்கு உணவாக இருப்பதிலும், இந்நண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பேராசிரியர் பெயர் சூட்டப்பட்ட புதிய வகை ந‌ண்டு!

பேராசிரியர் பெயர் சூட்டப்பட்ட புதிய வகை நண்டு!

இந்த புதிய நண்டு இனத்திற்கு, கடல் உயிரியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின், கடல் அறிவியல் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் த. பாலசுப்ரமணியனனை கவுரவிக்கும் விதமாக கலாத்தியா பாலசுப்பிரமணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வள பேணகம் (NBFGR) நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வினை, அந்த நிறுவனத்தின் மண்டலத்தலைவர்  தி.த.அஜித் குமார் வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மாணவர், சுரேந்திரன் மேற்கொண்டார் என்பது குறிப்பட்டத்தது.
இதுகுறித்து தேசிய மீன் மரபணு வள பேணகம் மண்டலத்தலைவர் தி.த.அஜீத்குமார் தெரிவிக்கையில்,  இந்த நண்டின் உடல் அமைப்புகளை (morphological features) ஆராய்ந்ததுடன், இந்திய-பசிபிக் பகுதியிலுள்ள அதன் நெருங்கிய தொடர்புடைய இனங்களுடன் ஒப்பிட்டு, டி.என்.ஏ (DNA) பகுப்பாய்வின் மூலம் இந்த புதிய இனத்தை உறுதிப்படுத்தினர். இந்த ஆய்வு முடிவுகள், சர்வதேச விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டு, உலகளாவிய உயிரின வகைப்பாடு இதழான Zootaxa-வில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கலாத்தியா பாலசுப்பிரமணி இனம், அதற்கு நெருக்கமான  ஜி.மெளரிட்டியானா  (G. mauritiana) இனத்திலிருந்து பல உடல் அம்சங்களில் வேறுபடுவதோடு, தெளிவான மரபணு வேறுபாடுகளையும் கொண்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, லட்சத்தீவின் செழுமையான, ஆனால் இன்னும் முழுமையாக ஆராயப்படாத கடல் உயிரினங்களை கண்டறிவதுடன், காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் மனித நடவடிக்கைகள் போன்ற அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பவளப் பாறைகளை பாதுகாப்பது எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. புதிதாக கண்டறியப்பட்ட இந்த நண்டு, லக்னோவில் உள்ள தேசிய மீன் மரபணு வள பேணகத்தால் (NBFGR) பராமரிக்கப்படும் தேசிய நீரியல் உயிரினக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்!