
கோயில் என்றாலே பொருள்படுவதும், ஆனந்த நடராஜ மூர்த்தி எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவதும், வேண்டும் வரங்களை உடன் அருளுவதும், தரிசித்தால் முக்தி தருவதும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவதும், சித்சபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தருவதும், சிதம்பர ரகசியம் விளங்குவதும், அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவதும் ஆகிய சிதம்பரம் தலம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.
தினமும் ஆறு காலம் பூஜை!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
நடராஜப் பெருமானுக்கு நாள் ஒன்றுக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறும்.
1. காலசந்தி,
2. காலை 10.00 மணிக்கு மேல் இரண்டாம் காலம், 3. உச்சிகாலம்,
4. மாலை சாயரடசை,
5. இரவு இரண்டாம் காலம் பூஜை,
6. இரவு பத்து மணிக்கு அர்த்தஜாம பூஜை.
ஒவ்வொரு கால பூஜையிலும், நடராஜப் பெருமான் தனது சந்திர கிரணங்களில் இருந்து திரட்டிப் பெற்று, நித்திய ஆறு கால அபிஷேக பூஜைக்காக தீட்சிதர்களிடம் தந்தருளிய ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பிரம்மா நடத்திய யாகத்தில் வெளிப்பட்ட ரத்தின சபாபதி!
முன்பொரு சமயம், பிரம்மா அந்தர்வேதி எனும் இடத்தில், பூஜைகளையும் யாகங்களையும் சிறப்புற செய்திடும் தீட்சிதர்களைக் கொண்டு, சிறப்பு வேள்வி செய்தார். இடைப்பட்ட நேரத்தில் உணவு அருந்த அனைவரையும் அழைக்க, தீட்சிதர்களோ அம்பலவாணரைக் காணாமல் அன்னம் புசிக்க மாட்டோம் என கண்டிப்புடன் சொல்லிட, ஹோமம் செய்திட்ட பலன் கிடைக்காமல் போய்விடுமே என்று அஞ்சி, தீட்சிதர்களுக்கு குறைவு வராமல் இருக்க வேண்டுமே என்பதற்காக, சிவபெருமானை வழிபட, வேண்டுவோருக்கு உடனடியாக வரமளிக்கும் வள்ளற்பிரானாகிய சிவமூர்த்தி, அந்த யாக வேள்வியில் தோன்றி தீகட்சிதர்களுக்கு காட்சி அளித்ததோடு நில்லாமல், தனது அம்சமாக ரத்ன சபாபதி எனும் அற்புத வடிவை வழங்கினார். பிரம்மாவின் அந்தர்வேதி யாகம் சிறப்புற நடந்தேறியது.
தினமும் இரண்டாம் கால பூஜையில் ரத்ன சபாபதிக்கு அபிஷேகம் ஆராதனை!
அந்த ரத்ன சபாபதியை தமது நித்ய அபிஷேக ஆராதனைகளுக்காக தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்திற்குக் கொண்டு வந்தனர் தீட்சிதர்கள். இந்த அமைப்பிற்கு பதஞ்சலி மகரிஷி வகுத்த முறைப்படி, நடராஜர் நடனமிடும் பொன்னம்பலத்திற்கு அடுத்த அழகிய மண்டபமாகிய கனகசபையில், ஒவ்வொரு நாளின் காலை (சுமார் 10.00 மணியளவில்) இரண்டாம் வேளையில் அபிஷேகம் ஏற்பார். மரகத நடராஜர், மாணிக்க நடராஜர் என மக்களால் போற்றப்படும் ரத்ன ஸபாபதி வடிவம் மிக மிக அழகு வாய்ந்தது. சிறப்பு பெற்றது.
நடராஜப் பெருமானின் அம்சமானதால் உலகின் மிக மிக மிக அரிய (மரகதமும் அல்ல மாணிக்கமும் அல்ல) ரத்தினத்தால் ஆனது.
விசித்திரமான ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது!

இயற்பியல் விதியின் படி ஒரு பொருளின் மேல் ஒளியைப் பாய்ச்சினால் பொருள் ஒளிர்ந்து, ஒளி ஊடுருவும் தன்மை கொண்டால் மறு புறம் ஒளி காட்டும்.
ஆனால், இந்த ரத்ன சபாபதி விசித்திரம் வாய்ந்தது. அபிஷேகம் முடிந்து, பூஜை செய்யும் தீகட்சிதர், தீபாராதனை காட்டும் போது முன்புறம் தீப ஒளிபடும் இடம் கருப்பாகவும், பின்புறம் ஜோதி மயமாகக் காட்சி தரும். ரத்ன சபாபதிக்குப் பின்புறம் தீபாராதனை செய்யும்போது முன்புறம் ஜோதிர்மயமாகக் காட்சி தரும்போது, பக்தர்களின் `ஹரஹர மஹாதேவா’ கோஷம் விண்ணைப் பிளக்கும்.
ஜோதிர்மயமான காட்சியே ரத்ன சபாபதி தரிசனக் காட்சியாகும். வார்த்தைகளால் விவரிக்கவே இயலாத காட்சி. இதனைக் காண்பவர்களின் வாழ்க்கை ஒளிபெறும். வளம் பெறும். எண்ணங்கள் ஈடேறும் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் ரத்ன சபாபதி அபிஷேக ஆராதனையை கண்டு தரிசிப்பார்கள்.