சிதம்பரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் தலைக்குளம் கோயில்!


இயற்கை எழில் கொஞ்சும் தலைக்குளம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீமூலநாதர் கோயில்!

உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் சிதம்பரத்தில் உள்ளது. சிதம்பரத்தை சுற்றி பழமையும், தொன்மையும் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி வட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் தலைக்குளம் கிராமம். இக்கிராமத்தில் ஸ்ரீ உமயபார்வதி சமேத திருமூலநாதர் (ஸ்ரீ மூலநாதர்) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் (தில்லையில்) சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆதிமூலநாதர் போன்றே ஸ்ரீ மூலநாதராக அருள் பாலிக்கிறார்‌. இந்த பழமை வாய்ந்த கோயில் அமைந்துள்ள தலைக்குளம் கிராமம், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவிலும், புவனகிரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருட்பிரகாச வள்ளலார் அவதரித்த மருதூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் அருகில் உள்ளது இந்த அழகிய கோயில்.

இக்கோயில் உருவாகியது எப்படி?

ஸ்ரீ மூலநாதர் கோயிலின் உட்தோற்றம்!

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் செப்பறை சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட சுவாமிகள் தலைக்குளம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த கிராமத்தில் வேளாண் தொழிலில் சிறந்திருந்த மங்களம் பிள்ளை சுவாமிகளை தனது இல்லத்திற்கு உணவு உண்ண அழைத்துள்ளார். அவரோ  இந்த ஊரில் கோயில் எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார். கோயில் அந்த ஊரில் இல்லை என்பதை அறிந்து அடியார் அந்த ஊரில் இருந்து  உணவு கூட உண்ணாமல் புறப்பட்டு சென்று விட்டார். அதனால் மனக்கவலையில் ஆழ்ந்த மங்களம் பிள்ளை அப்போதே அந்த ஊரில் ஒரு சிவன் கோயிலை கட்ட முடிவு செய்தார். அவர் அந்த ஊரில் இருந்த தன் வயலையே சமன் செய்து அதில் இயற்கையோடு ஒன்றிய வகையில் கருங்கல்லில் ஆன சிவன் கோயிலை கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.  அக்கோயில் திருப்பணிகள் முடிந்து கடந்த 1924 ம் ஆண்டில் அருள்மிகு உமையப்பார்வதி சமேத ஶ்ரீ மூலநாதர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 கி.மீ. தூரம் ஒலி எழுப்பும் கண்டா மணி ஓசை!

கண்டா மணி!

கண்டா மணி. இது தூரத்திற்கு கேட்கக்கூடிய பேரோசை உடையது. இதன் ஓசை மனதிற்குள் ஒரு நீண்ட இனிய அதிர்வை ஏற்படுத்தக் கூடியது. இக்கோயிலில் மடப்பள்ளியை ஒட்டி மிகப்பெரிய அளவில் கண்டா மணி உள்ளது. இக்கோயிலில் மணி அடிக்கும் போது இந்த மணி ஓசை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தூரம் வரை ஒலிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலை வட நாட்டில் உள்ளது போன்று அமைந்துள்ளது.

இக்கோயில் முருகனை வழிபட்டால் திருமணம் நிச்சயம்!

கோயில் வாயிலில் காட்சி தரும் மயில்!

கோயிலை மயில் சுற்றி வந்தாலே அங்கு முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். ஆம் இக்கோயிலில் அடிக்கடி மயில் வலம் வருவதை காணலாம். இங்கு அருள்பாலித்து வரும் முருகப்பெருமானை வழிபட்டால் திருமண பாக்கியம் கைகூடும் என்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிட்டுகிறது என்றும் இங்கு வரும் பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்கின்றனர்.

இயற்கையோடு ஒன்றி அழகு ததும்ப காட்சியளிக்கும் கோயில்!

இயற்கையோடு ஒன்றி அழகு ததும்ப காட்சியளிக்கும் கோயில்!

நூற்றாண்டு கண்ட பெருமை வாய்ந்த ஸ்ரீமூலநாதர் கோயிலில் உள்ள திருமேணிகள் யாவும் மிகவும் நேர்த்தியாக அழகு ததும்ப காட்சியளிக்கிறது. பழமை வாய்ந்த இக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இக்கோவிலில் உள்ள முருக பெருமானுக்கு சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பசுமையான சூழலில் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும் தலைக்குளம் கோவிலுக்கு சென்று வழிபடலாம். சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தலைக்குளத்திற்கு நகரப் பேருந்து உள்ளது. சிதம்பரம் புவனகிரி பகுதியில் இருந்து ஆட்டோவிலும் இக்கோயிலுக்கு செல்லலாம். இக்கோயில் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை திறந்திருக்கும்! இக்கோயிலுக்கு செல்பவர்கள் கோயிலை நிர்வகித்து வரும் வ‌.அமிர்தகடேசன் (செல் நம்பர் 9443220893) என்பவரை தொடர்பு கொள்ளலாம்!