மயூரநாதரை தரிசித்தால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும்!


மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் கோவிலின் அழகிய கோபுரம்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில்,மயிலாடுதுறை நகரில் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீ மயூரநாதர் கோவில். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத்தலங்களில் அமைந்துள்ள சிவஸ்தலமாகும்.புராண காலத்தில் மயிலாடுதுறை தென்மயிலை, பிரம்மபுரம்,சிகண்டிபுரம் என அழைக்கப்பட்டுள்ளது. இத்தல இறைவன் மயூரநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வருகின்றார்.பழமை வாய்ந்த இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் இருந்து மயிலாடுதுறை 256 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 131 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் ரயில்வே ஜங்ஷன் உள்ளதால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ரயில் வசதி உள்ளது. மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மயூரநாதர் கோவில் வரலாறு!

மயூரநாதர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரம்.

மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதரை வழிபட்டால் கருத்து வேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடுபவர்களை புனிதப்படுத்தி விட்டு,அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். மூன்று நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும், ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் மற்றும் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஆனந்தவல்லி சமேத சக்தி புரீஸ்வரர் ஆகியோரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

அம்மன் மயில் வடிவில் தாண்டவமாடி ஈசனை வழிபட்டதால் மயிலாடுதுறை என பெயர் பெற்றது!

ஸ்ரீ மயூரநாதர் சன்னதி

திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றிப் பாடியுள்ளனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இங்கு அம்மன் மயில் வடிவில் தாண்டவமாடி ஈசனை வழிபட்டதால் ‘மயிலாடுதுறை’ என்ற பெயர் உண்டானதாக கூறப்படுகிறது. ஐப்பசி மாத விழாவின் ஐந்தாம் நாளில் சிவன்-பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்கு நடராஜர் மயூரத் தாண்டவக் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது.
கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்து வேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள்.

பசியில் துடித்த சிறுவனுக்கு உணவளித்த அபயாம்பிகை!

ஸ்ரீ அபயாம்பிகை சன்னதி.

இத்தல அம்மனின் திருநாமம் ‘அபயாம்பிகை’ என்பதாகும். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகிலுள்ள நல்லத்துக்குடி என்னும் திருத்தலத்தில், சிவபக்தி நிறைந்த குடும்பத்தில் கிருஷ்ணசாமி எனும் சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் உண்ண உணவில்லாமல் பசியில் தனித்திருந்தான். அவன் மனம் மயிலாடுதுறை அபயாம்பிகையை எண்ணித் துதித்தது. அப்போது சாதாரண பெண் வடிவில் வந்த அபயாம்பிகை அம்பாள், தங்கக் கிண்ணத்தில் தாம் கொண்டுவந்த அன்னத்தை எடுத்து கிருஷ்ணசாமிக்கு ஊட்டினார். அப்போதே மிகுந்த ஞானமும், கல்வியும், கவி புனையும் ஆற்றலும் கைவரப்பெற்றான் அந்தச் சிறுவன். அதுமுதல் கிருஷ்ணசாமி தினமும் அதிகாலையில் நல்லத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்று மயூரநாதர் ஆலயத்தில் தொண்டாற்றி, அர்த்தஜாம பூஜை முடிந்தபின்பு நல்லத்துக்குடிக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.ஒருநாள் அர்த்தஜாம பூஜை முடிந்து நல்லத்துக்குடிக்கு கிருஷ்ணசாமி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் இருளில் கால் இடறி விழுந்தார். ‘அபயாம்பிகை அம்மா! எனக்கு இந்த இருளில் ஒளி காட்டி அருளக் கூடாதா?” என அன்னையை அழைத்தார். என்ன ஆச்சரியம்! அன்னை அபயாம்பிகை திருக்கரத்தில் கைவிளக்கு ஏந்தி அவர் முன் தோன்றி ஒளிவீச வழிகாட்டினாள். கிருஷ்ணசாமி மெய்மறந்து அன்னையைத் துதித்தார். நல்லத்துக்குடி வரை அபயாம்பிகை அம்மன் கையில் விளக்குடன் வந்து வழிகாட்டி மறைந்தார்.அன்று முதல் அனுதினமும் அர்த்தஜாம பூஜை முடிந்து நல்லத்துக்குடிக்குச் செல்லும் கிருஷ்ணசாமியின் முன்பு கைவிளக்கு ஒன்று தோன்றி அவரது வீடுவரை ஒளிவீசி வழிகாட்டி வருமாம். அந்தரத்தில் மிதந்தபடி அருள்வழி காட்டி தினமும் கிருஷ்ணசாமியை அழைத்துச் செல்லும் விளக்கைக் கண்ட ஊரார் ஆச்சரியப்பட்டனர்.

அபயாம்பிகை சதகம்!

ஸ்ரீ அபயாம்பிகை சன்னதி வெளி மண்டபம்.

ஒருநாள் அபயாம்பிகை அம்மன் முன்பு நின்று வழிபட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணசாமிக்கு, யாவரும் கேட்கும் வண்ணம் கருவறையில் இருந்து அசரீரி கேட்டது. “அன்பனே! சதகம் எனும் நூறுப் பாடல்களை செந்தமிழால் எம்மைப் புகழ்ந்து பாடுக. உன்னுடைய அந்தச் சதகப் பாடல்களின் மூலம் யார் என்னைத் துதித்து வழிபட்டாலும், அவரது குலம் சிறந்து விளங்க அருள்புரிவேன்” என்றது அந்தக் குரல். “அம்மா! கவி பாடும் அளவுக்கு எனக்குத் திறமை இல்லையே? நானெப்படி உன் மீது பாமாலை சூடுவேன்?” என்று கிருஷ்ணசாமி மனமுருக வேண்ட, “அதற்கு நானே அருள்புரிவேன்” என்று அவருக்கு கவிபாடும் திறனை அன்னை அருளினாள்.
திருக்கடையூர் அபிராமி அம்மன் மீது நூறு பாடல்களைக் கொண்ட ‘அபிராமி அந்தாதி’ பாடியதன் மூலம் சுப்பிரமணியன் ‘அபிராமி பட்டர்’ ஆனார். அதே போல மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மன் மீது நூறு பாடல்களைக் கொண்ட ‘அபயாம்பிகை சதகம்’ பாடியதன் மூலம் கிருஷ்ணசாமி ‘அபயாம்பிகை பட்டர்’ ஆனார். இந்த சதகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் மயூரநாதருக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத அனைத்து திங்கட்கிழமைகளின் அந்திப்பொழுதில் 1008 சங்காபிஷேகமும் வெகுச்சிறப்பாக நடைபெறுகிறது.

காவிரி துலாஸ்நானம்!

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி ஆறு.

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர்.இந்த மாதத்தில் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர்.‘ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம்’ எனக் கூறப்படுகிறது.துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அதில் ஸ்நானம் செய்தவர்கள் அசுவமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

ஐப்பசி 1 முதல் நாளன்று
திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. துலா மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் காவிரி நதியில் நீராடினால், மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பது முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில் இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி 30ந் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்று கூறப்படுகிறது.