ஆன்மா லயிக்கும் இடமான கோயிலை நம் முன்னோர்கள் கட்டிக் காத்து வந்துள்ளனர். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றார் ஔவையார். “தென்னாடுடைய சிவனே போற்றி,என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” எனும் சைவ மதம் பல ஆண்டுகளாக நின்று தழைத்து உள்ளது. அப்படிப்பட்ட சைவ மதத்திற்கு ஆதாரம் தேவாரம். தேவாரத்திற்கு மூலாதாரம் பொல்லாப் பிள்ளையார். பொல்லா என்றால் உளியால் செதுக்கப்படாமல் தானாக தோன்றியது என்பார்கள். தானாக தோன்றியவர் பொல்லாப் பிள்ளையார்.
பொள்ளாப் பிள்ளையார் தோன்றிய இடம் திருநாரையூர்!
பொல்லாப் பிள்ளையார் தோன்றிய இடம் திருநாரையூர். அழகிய சிற்றூரான திருநாரையூர் பூலோக கைலாயம் என போற்றப்படும் சிதம்பரத்தில் இருந்து தென் மேற்கில் 16 கிமீ தொலைவில் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.திருநாரையூர் திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற, சோழ நாட்டுக் காவிரியின் வடகரைத் தலங்களில் 33-வது திருத்தலமாக விளங்குகின்றது. திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், அப்பர் பெருமானின் இரண்டு பதிகங்களும் கொண்ட இத்திருத்தலத்து இறைவன் திருநாமம் ‘ஸ்ரீசவுந்தரேஸ்வரர்’. அம்பிகையின் திருநாமம் ‘ஸ்ரீதிரிபுரசுந்தரி’ இத்தலத்தின் சிறப்புகளை சற்று விரிவாகக் காண்போம்.
திருநாரையூர் பெயர் வரக் காரணம்!
துர்வாசர் தவத்தில் இருந்த போது ஆகாய மார்க்கமாக கந்தர்வர்கள் பறந்து சென்றார்கள்.
அவர்களில் தேவதத்தன் என்னும் கந்தர்வன் பழங்களை சாப்பிட்டு விட்டு
அதன் கொட்டைகளை கீழே துப்ப அது தவத்தில் இருந்த துர்வாச முனிவரின் மேல் பட்டு முனிவரின் தவம் கலைந்தது. கண் திறந்த முனிவர் அந்த கந்தர்வனை சபித்தார். “பழக்கொட்டையைப் பறவை போல் உதித்த நீ நாரையாய் போக கடவுது”என சபித்தார். முனிவரின் சாபம் பலித்து விட்டது.
நாரை தன் பாவத்திற்கு விமோசனம் வேண்ட
முனிவரே வழி சொன்னார். இங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால் உனக்கு விமோசனம் கிடைக்கும். நாரையும் அப்படியே செய்து வந்தது. ஒரு நாள் இறைவனின் சோதனையால் காசியில் இருந்து நீர் கொண்டு வரும்போது பெரும் மழை புயல் ஏற்பட்டது. அதனால் பறக்க முடியாமல் நாரை தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன (அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் எனப் பெயர் பெற்றது. சிறகிழந்நல்லூர் திருநாரையூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.) சிறகுகளே இல்லாமல் நாரை தவழ்ந்து வந்து சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றது.அதனால் அந்த ஊர் ‘திருநாரையூர்’ என்று அழைக்கப்படுகிறது.நாரைக்கு அருள் செய்த இத்தலத்து இறைவன் சுயம்புவாக தோன்றியதால் ஸ்ரீ சுயம்பிரகாசர் எனவும் நாளடைவில் சவுந்தரேஸ்வரர் எனவும் அம்பாள் திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகின்றது.
பொள்ளாப் பிள்ளையார்!
ஸ்ரீ சவுந்தரேஸ்வரர் சன்னதிக்கு தென்மேற்கு திசையில்
தனி சன்னதியில் நீ பொள்ளாப் பிள்ளையார் அருள் பாலித்து வருகின்றார். நல்லார்க்கும், பொல்லார்க்கும் நலம் கொடுக்கும் அந்நாயகரை பொல்லாதவர் என கூறலாமோ? பொல்லாப் பிள்ளையார் என்பதே தற்போது மருவி பொள்ளாப் பிள்ளையார் என தற்போது வழங்கப்படுகிறது.பொள்ளாதே- என்றால்
உளியால் செதுக்கப்படாத தானாக தோன்றியது என்று பொருள். இந்த பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றிய காரணத்தால் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சுப்பிரமணியருக்கு எவ்வாறு ஆறுபடை வீடுகள் உள்ளதோ அதேபோல் விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளன. அதில் முதன்மையானது திருநாரையூர்.மற்ற தலங்கள் ‘திருவண்ணாமலை’ ‘திருமுதுக்குன்றம்'(விருத்தாசலம்), திருக்கடவூர்(திருக்கடையூர்) மதுரை, காசி ஆகியவையாகும்.பொள்ளாப் பிள்ளையார் இல்லாவிட்டால் தேவாரப்பாடல்கள் நமக்கு கிடைத்திருக்காது.
நம்பியாண்டவர் நம்பி!
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை சிதம்பரம் அருகே உள்ள திருநாரையூரில் உள்ள சவுந்தரயேஸ்வரர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த பிரசாதத்தை திருப்தியாகச் சாப்பிட்டார்.
திருமுறைகளை தேடி வந்த ராஜராஜ சோழன்!
இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும் சைவத் திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றை தொடுக்கும் மாபெரும் பணியை முடித்து விட வேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்காக ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி அங்கு வந்தான்.நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இதனைக் கண்ட மன்னர் திருமுறைகள் இருக்கும் இடத்தை கேட்டு விநாயகரிடம் வேண்டினார். அப்போது சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலில் வடமேற்கு மூலையில் உள்ளது என்றும் அதனை காட்டுவோம் என குரல் வந்ததை கேட்டு அனைவரும் ஆச்சர்யத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அவர் கூறிய அறை பூட்டி இருப்பதைக் கண்டார்கள். அதனை திறக்க நடராஜர் கோயில் தீட்சிதர்களை வேண்டினார்கள். ஆனால் உரியோர் வந்தால் திறக்கப்படும் என தில்லைவாழ் அந்தணர்கள் கூறிவிட்டார்கள். இந்நிலையில் “மாண்டார் வருவாரோ” என எண்ணிய மன்னன் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவர் உருவச் சிலையை நன்கு அலங்கரித்து அங்கு எழுந்தருளச் செய்தார். இதனையடுத்து அந்த அறை திறக்கப்பட்டது. அங்கு பனை ஓலையில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பூட்டிய இருட்டு அறையில் பல நாட்கள் இருந்ததால் கரையான் புற்றால் மூடப்பட்டிருந்தது. அதனை சிந்தாமல் சிதறாமல் எடுக்க எண்ணெய் குடம்,குடமாககொட்டி கரையானை போக்கி எஞ்சியதை எடுத்தனர். அதில் திருஞானசம்பந்தர் அருளியது 384 பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளியது 312ம்,சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது 100 ஆக 796 பதிகங்களை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தனர்.
கோயில் அமைப்பு!
இன்று திருமுறைகள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீநம்பியாண்டார் நம்பி, ராஜ ராஜ சோழன் மூலமாக அருளியவர் திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார். இக்கோயிலுக்கு வெளியே கிழக்கில் ‘காருண்ய தீர்த்தம்’ என்ற திருக்குளம் உள்ளது.கோயில் முகப்பு
வாயிலும் அதை தொடர்ந்து சிறிய விநாயகரும், நந்தி மண்டபமும் காணப்படுகின்றன.கொடி மரம் கிடையாது. அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. நேரெதிரே ஸ்ரீ சவுந்தரேஸ்வரர் சாமி சன்னதி அமைந்துள்ளது. சாமி சன்னதி கருவறை விமானம் அர்த்த சந்திர விமானம் எனப்படுகிறது. விமான உச்சியில் இரண்டு கலசங்கள் உள்ளன. சாமி சன்னதி மகா மண்டபத்தில் உற்சவமூர்த்திகளும்,சோபன மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜர் சன்னதியும் அமைந்துள்ளது. சாமி சன்னதி வெளிப்புற கோஷத்தில் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர் அருள் பாலித்து வருகின்றார்கள்.தென்கிழக்கு மூலையில் வாகன மண்டபமும், மடப்பள்ளி ஆகியவை உள்ளன. ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் மகா மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டவர் நம்பியும் ராஜராஜ சோழனும் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தின் மேற்கே ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதியும், வடமேற்கில் ஸ்ரீ கஜலட்சுமி சன்னதியும், வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சன்னதியும், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன. கோயில் தலவிருட்சம் புன்னை மரமும் கோயிலில் உள்ளது.
விழாக்கள்!
சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, கந்த சஷ்டி விழா,பிரதோஷம், மகா சிவராத்திரி முதலியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் வைகாசி திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் நம்பியாண்டவர் நம்பி குருபூஜை விழா திருமுறை விழாவாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் அன்னதானம் வழங்கப்படுகின்றது.
கோயில் திறந்திருக்கும் நேரம்!
திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோயில் காலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 11:30 மணிக்கு நடை அடைக்கப்படுஇறது. மீண்டும் மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.. மன அமைதி இல்லாதவர்களுக்கு மன அமைதியை தரும் கோயிலாக இக்கோயில் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு ஒரு முறையாவது சென்று தரிசனம் செய்வது நலம்.
கோயில் மகா கும்பாபிஷேகம்!
மிகவும் தொன்மையான, அற்புதமான, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில் கும்பாபிசேஷகம் 1984ல் நடைபெற்றுள்ளது. பின்பு தற்போது திருப்பணிகள் நடைபெற்று 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.