இறைவன் அந்தணர் வேடத்தில் தோன்றி வழிகாட்டிய தலம் கூடலையாற்றூர்!


ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கூடலையாற்றூர் கோயில்.

தமிழ்நாட்டில்,கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு குமாரகுடி வழியாக காவாளகுடி கிராமத்தை அடுத்து கூடலையாற்றூர் கிராமம் உள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூடலையாற்றூர். மணிமுத்தாறும், வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ளதால் கூடலையாற்றூர் என பெயர் பெற்றது.

சுந்தரருக்கு இறைவன் அந்தணராக காட்சி அளித்தார்!

சுந்தரர் தனது அடியார்களுடன் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கூடலையாற்றூர் தலத்தை கடந்து செல்லும் போது ஒரு முதிய அந்தணர் சுந்தரரை எதிர்கொண்டார். சுந்தரர் அவரை நோக்கி திருமுதுகுன்றம் செல்லும் வழி எது என்று கேட்க, அந்தணரோ இவ்வழி கூடலையாற்றூர் செல்கிறது என்று கூறி, சற்று தூரம் சுந்தரருடன் வந்து பின்பு மறைந்துவிட்டார். தான் வணங்கும் இறைவனே அந்தணராக வந்து கூடலையாற்றூருக்கு வழி காட்டி அருளிய இறைவனின் கருணையைப் போற்றி, கூடலையாற்றூர் அடைந்து திருப்பதிகம் பாடி அருளினார்.வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய இரண்டு ஆறுகள்  கூடும் இடத்தில் அமைந்த தலம் ஆதலால், இது திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தை தட்சிணப் பிரயாகை என்றும் கூறுவார்கள். ஒரு சமயம், வெள்ளப்பெருக்கினால் கோயில் அழிந்தமையால், அக்கற்களைக் கொண்டுவந்து ஊரில் திருக்கோயில் கட்டி, அதில் அதே சுவாமிகளை எழுந்தருளச் செய்துள்ளனர்.சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி, இத்தலத்தில் உள்ள இறைவனை பிரம்மா வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார் சிவபெருமான்.எனவேதான், இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம்!

கூடலையாற்றூர் கோயில் உட்தோற்றம்.

இக்கோயிலின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர்  காணப்படுகிறார்.  வெளிச்சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், காசி விஸ்வநாதர் லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகள் ஏறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் கம்பீரமான சுயம்பு சிவலிங்கத் திருமேனியில் மூலவரை  தரிசிக்கலாம்.கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை முதலியோர் உள்ளனர். சண்டிகேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. சுவாமிக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய புரிகுழல்நாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நடராச சபையில் நடராஜருடன் சிவகாமி மூர்த்தமும் உள்ளது. சித்திரை மாதம் முதல் மூன்று தேதிகளில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது, அம்பாள் ஞானசக்தி சந்நிதியைக் காணலாம்.

மூலவர் நர்த்தன வல்லேபேஸ்வரர் சந்நிதி.

இரண்டு அம்பாள் சந்நிதிகள்!

ஸ்ரீ ஞானசக்தி அம்பாள் சந்நிதி.

பொதுவாக, சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்பாள் சந்நிதி இருப்பது வழக்கம். ஆனால் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. புரிகுழல்நாயகி, ஞானசக்தி என்ற பெயர்களில் இரண்டு அம்பாள் அருள்பாலிக்கிறாள். ஞானசக்தி சந்நிதியில் குங்குமமும், புரிகுழல்நாயகி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும்; ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. புரிகுழல்நாயகி என்ற அம்பாளின் பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் முதல் பாடலில் கூறியுள்ளார்.இத்தலத்தில் மாசி மகம் உற்சவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. சிறந்த கல்வி பெறவும்,கல்வி தடை பெறாமல் படிக்க இங்கு வேண்டுவது சிறப்பு.

இங்குள்ள முருகரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்!

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.  இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இக்கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.00மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். சிதம்பரத்திலிருந்து நேரடியாக கூடலையாற்றூர் செல்வதற்கு நகரப் பேருந்து உள்ளது.