கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தங்கள்!


தமிழ்நாட்டில் கங்கைக்கு நிகரான
புண்ணிய தீர்த்தங்கள் நிறைய உள்ளன. அவற்றில் நீராடினால் கங்கையில் நீராடிய முழு பலனை பெறலாம்.காசி என்றதும் நினைவிற்கு வருவது கங்கை நதி.வாழ்வில் ஒரு முறையாவது கங்கையில் நீராட வேண்டும் என்பது இந்துக்களின் ஆவல்.புனித கங்கையில் நீராடினால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பது நமது நம்பிக்கை.

காசிக்குச் சென்று கங்கையில் நீராட வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் கங்கைக்கு நிகரான தீர்த்தங்களில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன்கள் கிட்டும் என கூறப்படுகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் கங்கைக்குச் நிகரான தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கை!

ஸ்ரீ வாஞ்சியம்  கோயிலில் உள்ள குப்த கங்கை

ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் திருக்குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது ஐதீகம்.அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் தென் பகுதியில் ஓடும் காவிரியில் துலா (ஐப்பசி) மாதத்தில் நீராடினாலும், கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் கங்கையில் நீராடிய முழுப்பலன் கிட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் தலத்தில் ஸ்ரீதரஐயாவாள் மடத்தில் உள்ள கிணற்றில் கார்த்திகை அமாவாசை அன்று கங்கையாகப் பொங்கி தண்ணீர் வெளியேறும்.அந்த நீர் கங்கை நதிக்கு ஒப்பாகக் கருதப்படுவதால் அன்று அதில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது கைச் சின்னம் எனும் திருத்தலம். அத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் ஒன்று ஆகாயகங்கை.அத்தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி கிட்டும் என்பர்.

திருநள்ளாறு, சனிபகவான் ஆலய வளாகத்துள் கங்கா தீர்த்தக் குளம் உள்ளது.அதில் நீராடினால் ஏழரைச் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்குளம்.

சிதம்பரம் தலத்தினுள் இருக்கும் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும், தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும், திருவாரூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில், குருவி ராமேஸ்வரத்தில் உள்ள முக்கூடல் தீர்த்தம் எனும் திரிவேணி சங்கமத்திற்குச் சமமான தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய சிறப்பைப் பெறலாம்.

திருச்செந்தூர் நீராடல் ரகசியம்!

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவன் கோயில் முன் உள்ள கடலில் மதியம் பன்னிரண்டு மணியளவில் தினமும் கங்கை வந்து நீராடுவதாக ஐதீகம்.அச்சமயம் ஆலய அர்ச்சகர் கடலுக்கு தீபாராதனை செய்வார். அச்சமயத்தில் கடலில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணிய பலன் கிட்டும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது திருக்கோஷ்டியூர்.இங்கு அமைந்துள்ள சௌம்யநாராயணப் பெருமாள் கோயிலில் மகா கிணறு ஒன்று உள்ளது.அதில் ஐப்பசி அமாவாசை அன்று நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது விஸ்வேஸ்வரர் ஆலயம்.அக்கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தக் கிணற்றில் கங்காதேவி தீர்த்தமாடி தன் மீது பக்தர்கள் சுமத்திய பாவங்களைப் போக்கிக் கொண்டாளாம்.இங்கு கங்காதேவி கிணற்று
நீர் வடிவிலும், சிலைவடிவிலும் அருட்காட்சியளிக்கிறாள். இக்கிணற்றில் நீராட நம் பாவங்கள் தொலையும்.

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் துலா கட்டம் எனும் இடத்தில் கங்கை துலா மாதத்தில் நீராடி மகிழ்கிறாள்.

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி ஆறு.

எனவே, துலா (ஐப்பசி) மாதத்திலும் கார்த்திகை முதல் தேதி அன்றும் துலா கட்டத்தில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.

திருக்கடையூர் வீரட்டானம் திருத்தலத்திற்கு ஒரு கி.மீ. தொலைவில் திருக்கடவூர் மயானம் எனும் திருத்தலம் உள்ளது.இத்தலத்தில் உள்ள காசி தீர்த்தத்தில், பங்குனி மாதம் சுக்கிலபட்சம் அசுவதி நட்சத்திரத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் பெறலாம்.அந்நாளில் தான் மார்க்கண்டேயருக்கு கங்கை தீர்த்தமாக உருவெடுத்து வந்தது.

மதுரைக்கு அருகே அழகர் கோயிலில் உள்ள திருமாலிருஞ்சோலை மலையில் உள்ள நூபுர கங்கைத் தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய முழுப்பலனைப் பெறலாம்.

ராமேஸ்வரம் கோடி தீர்த்தம்!

ராமேஸ்வரம் கோடி தீர்த்தம்: இந்த தீர்த்தமானது ராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தியதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு கங்கை நீர் வந்ததாக கூறப்படுகிறது.இந்த கோடி தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய முழுப்பலனைப் பெறலாம்.