ஆச்சாள்புரம் கோயிலுக்கு சென்றால் திருமணம் தடை நீங்கும்!


ஆச்சாள்புரம் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில்.

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலம் திருநல்லூர் பெருமணம் என்று தேவாரம் பாடப்பெற்ற பெருமை பெற்ற இத்தலம், இன்றைய நாளில் ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படுகிறது. இக் கோயிலில் திருவெண்ணீற்று உமையம்மை சமேத சிவலோக தியாகேசர் அருள்பாலித்து வருகின்றார்.
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் வருகை தந்து “கல்லூர்ப் பெருமணம்” என்ற பதிகத்தைப் பாடினார். தனது வாழ்நாளில் சம்பந்தர் பாடிய “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று தொடங்கும் கடைசிப் பதிகமும் இத்தலத்தில்தான் பாடப்பெற்றது.சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தைக் கடந்தால் அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. சென்று இந்த சிவஸ்தலத்தை அடையலாம். இதே சாலையில் மேலும் 6 கி.மீ. செல்ல, மகேந்திரப்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலமும் உள்ளது. சிதம்பரம், மற்றும் சீர்காழியில் இருந்து ஆச்சாள்புரம் செல்ல நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.இவ்வாலயம் தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயில் அமைப்பு!

கோயில் எதிரில் உள்ள பஞ்சாட்சர தீர்த்தக் குளம்

சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம், கோவிலுக்கு எதிரில் உள்ளது. ராஜகோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன், கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.
நூற்றுக்கால் மண்டபத்தில், திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூரணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதையடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது.சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடு அமைந்த தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது.
ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும், கருவறை மேற்கு சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன.

தனிக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்பிகை!

திருவெண்ணீறு  உமையம்மை சந்நிதி.

இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி, தனிக்கோயிலாக மேற்கு வெளிப் பிராகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது.திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தரின் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால், அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறுதான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இதைப் பூசிக்கொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தர் இறைவனோடு ஐக்கியமான திருவிழா மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது.

திருமணக் கோலத்தில் இறைவன் திருவடியை சேர்ந்த சம்பந்தர்.

திருமணக் கோலத்தில் மனைவியுடன் காட்சியளிக்கும் திருஞானசம்பந்தர்.

திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து, தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். மனைவியுடன் இறைவன் திருவடி சேர்வதே ஏற்றதாகும் என்று கருதிய சம்பந்தர், பதிகம் பாடி இறைவனை துதிக்க, சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றி அதனுள் புகுவதற்கு ஒரு வாயிலையும் காட்டி அருளினார்.சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும்படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுள் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. இத்தகைய சிறப்புமிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.

ரிணவிமோசன லிங்கேஸ்வரர்!

ரிணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதியில் அபிஷேகம் காணும் பக்தர்கள்.

இத்தலத்தில் இறைவன் சந்நிதி சுற்றுப் பிராகாரத்தில் காணப்படும் ரிணவிமோசர் லிங்கேஸ்வரர் சந்நிதி ஒரு சிறப்பு வாய்ந்த சந்நிதியாகும்.ரிணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கள்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனைகள் செய்தால், நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற இத்தலம், ஒரு சிறப்பு பெற்ற திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது. இத்தலம் வந்து இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகாகும்.

மகா கும்பாபிஷேகம்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்த ஆச்சாள்புரம் கோயில்.
கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள்.

பழமை வாய்ந்த இக்கோயிலில் பல்வேறு பழுதுகள் நீக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் 2024ம்ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 16ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. 23.08.2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் சிவஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை, சீர்காழி,சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.