பாசுபதேஸ்வரரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்!


சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் கோயில்.

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் முதல் தலம் என்ற சிறப்புக்குரியது சிதம்பரம் நடராஜர் கோவில். இரண்டாவது தலமாக சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோவில் கூறப்படுகிறது. ஆதி காலத்தில் சிதம்பரம் தில்லை வனமாகவும், திருவேட்களம் மூங்கில் வனமாகவும் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது திருவேட்களம். இங்கு பழமை வாய்ந்த பாசுபதேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் நல்லநாயகி சமேத ஸ்ரீ பாசுபதேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றார்.இக்கோயில் குறித்து சம்பந்தர் அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர். இக்கோயிலின் தல மரமாக மூங்கில் விளங்கி வருகிறது.

அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம்!

திருவேட்களம்  ஸ்ரீ பாசுபதேஸ்வரர் கோயில் உட்தோற்றம்.

ஆதி காலத்தில் மூங்கில் வனமாக விளங்கிய இங்கு பாரதப் போரில் வெற்றி அடைவதற்காக பாசுபதம் வேண்டி சிவபெருமானை நோக்கி அர்ச்சுனன் தவம் இருந்தான். அவனது தவத்தை கலைக்க விரும்பிய துரியோதனன் மூகாசுரன் என்பவனை பன்றி உருவத்தில் அங்கு அனுப்பி வைத்தான். அந்த சமயத்தில் வேடுவன் உருவத்தில் பார்வதி தேவியோடு அங்கு வந்த சிவபெருமான் தனது அம்பினால் பன்றியை கொன்றார். இதே சமயத்தில் அர்ச்சுனனும் பன்றியின் மீது தனது அம்பினை எய்தான். இருவரும் ஒரே சமயத்தில் பன்றியின் மீது அம்பினை எய்த காரணத்தினால் பன்றியை கொன்றது யார்? என்று வேடுவன் உருவத்தில் இருந்த சிவனுக்கும், அர்ச்சுனனுக்கும் விவாதமும், பின்னர் வில் எய்தி போரும் நடைபெற்றது.இதில் அர்ச்சுனனின் வில் முறிந்து போனது. கோபத்தில் முறிந்த வில்லால் வேடனை  அர்ச்சுனன்  தாக்கியதால் அந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்ததுள்ளது. அதைக்கண்டு பார்வதிதேவி கடும் கோபமடைந்தார். “நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது” என்று பார்வதி தேவியிடம்  கூறிய சிவபெருமான் தனது திருவடியால் அர்ச்சுனனைத் தூக்கி எறிய அவன் சிவபெருமானின் பாத தீட்சை பெற்று கிருபா கடாட்ச தீர்த்தத்தில் விழுந்தான்.

பாசுபதேஸ்வரர் கோயில் பின்புற தோற்றம்.

சிவபெருமான் தன் உண்மை உருவத்தில் தோன்றி பார்வதி தேவியோடு அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்து பாசுபதம் தந்தருளினார். அதன் காரணமாகவே இத்தல மூலவர் பாசுபதேஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் அமைந்த இக்கோயில் கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கியும்,அம்பிகை நல்லநாயகி எனும் சற்குணாம்பாள் தெற்கு நோக்கியும் நின்ற திருக்கோலத்திலும் அருள் பாலித்து வருகின்றார்கள்.

சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாசுபதேஸ்வரர்.

கோவில் பிரகாரத்தில் சித்தி விநாயகர், சோமஸ்கந்தர், நால்வர்,மகாலட்சுமி சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும் பைரவர், நவகிரகங்கள், சந்திரன், சூரியன் ஆகியோரும் தரிசனம் தருகிறார்கள். பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியரோடு மயில்மீது எழுந்தருளியுள்ளார் முருகப்பெருமான். இவர் மீது அருணகிரிநாதர் திருப்புகழில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். கோஷ்ட மூர்த்திகளாக உச்சி விநாயகர்,நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோருடன் சண்டிகேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளது.

கோயில் தலவிருட்சம் மூங்கில்!

பாசுபதேஸ்வரர் கோயிலின் தலவிருட்சம் மரம் மூங்கில்.

இக்கோயிலின் தலவிருட்சம் மூங்கில் ஆகும். கோயிலின் அருகில் நாகலிங்க மரமும், கோயிலுக்கு எதிரே கிருபா தீர்த்தக் குளமும் அமைந்துள்ளது. இத்தலத்தை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். தினமும் 5 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நவராத்திரி, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற. இதில் கார்த்திகை சோமவாரம், பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தளத்தில் வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில் அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளித்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமண தடை நீங்கும் என கூறப்படுகிறது. இக்கோவில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளதால் ஏராளமான மாணவ மாணவிகள் தினமும் கோவிலுக்கு வந்து பாசுபதேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர்.