நார் சத்து நிறைந்தது நாவல் பழம்.


இனிப்பு, புளிப்பு என இரண்டு சுவையும் கலந்தது நாவல் பழம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. தற்போது நாவல் பழம் சீசனாக இருப்பதால் பலரும் அதனை ருசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நாவல் பழத்தை எல்லோரும் சாப்பிடலாம். நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஜாம்போலின் உள்ளது. இது மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதை கட்டுப்படுத்த உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் நாவல் பழம்

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் நாவல் பழம். ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நாவல் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலை தடுக்கும். குடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கும் உதவிடும். நாவல் பழத்தின் விதைகள் மற்றும் பட்டைகள் பாரம் பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.நாவல் பழத்தில் அந்தோசயின்கள், பிளாவனாய்டுகள், பாலி பீனால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. புற்றுநோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.”நாவல் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சி அபாயத்தை குறைக்கும்.”

நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்கச் செய்யும். நாவல் பழத்தில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்திற்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடும், விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும்.நாவல் பழத்தில் நார்ச்சத்து அதிகம். கலோரி குறைவு. அதனால் உடல் எடையை சீராக நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு நாவல் பழம் சிறந்த தேர்வாக அமையும். குறைவாக சாப்பிட்டாலே வயிற்றுக்கு திருப்தி அளிக்கும். அதனால் அதிக கலோரிகளை உட்கொள்ள தோன்றாது. ஒட்டுமொத்தமாகவே கலோரி உட்கொள்ளும் அளவை குறைக்கும்.

நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்!

நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவும். அதன் இலைகள் மற்றும் பட்டைகள் வாய் புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், ஈறு நோய்களை தடுப்பதற்கும் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாவல் பழத்தை யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்?குழந்தைகள் 50 கிராம் முதல் 75 கிராம் வரை உட்கொள்ளலாம். அதேவேளையில் அவர்களுக்கு ஒவ்வாமையோ, செரிமான பிரச்சினைகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியமானது.மற்றவர்கள் சுமார் 100 கிராம் முதல் 150 கிராம் நாவல் பழம் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் தினமும் 50 முதல் 100 கிராம் வரை சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கும் உதவும்.இரைப்பை குடல் பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் நாவல் பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அதனை அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.