பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கம்.


பரங்கிப்பேட்டையில் உள்ள கலங்கரை விளக்கம்.

தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் உள்ள கலங்கரை விளக்கம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை கடலோரப்பகுதியில் கலங்கரை விளக்கம் செயல்பட்டு வந்தது.இந்த கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி சுற்றுலா பயணிகள் வங்காள விரிகுடா கடலின் அழகு மற்றும் கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகள் ஆகியவற்றையும், பரங்கிப்பேட்டை பிச்சாவரம் பகுதியில் உள்ள அடர்ந்த சுரப்பண்ணை காடுகளையும் அங்கிருந்து கண்டு ரசித்து வந்தனர்.ஒவ்வொரு வாரமும் ஏராளமான மக்கள் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலுக்கு பிறகு சென்னை மற்றும் புதுச்சேரி மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை இயக்குனரகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தடைசெய்யப்பட்டது. இதனால் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரங்கிப்பேட்டை பயணியர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து மத்திய அரசுக்கும், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் கோரிக்கை வைத்து மனுக்களை அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து கடந்த 17.06.24 அன்று முதல் கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம்.

பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள இந்த கலங்கரை விளக்கம் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 25 கலங்கரை விளக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.  30 மீட்டர் உயரமும், 15 நொடிக்கு ஒருமுறை வெளிச்சத்தை பாய்ச்சும் 150 வாட்ஸ் சக்தியைக் கொண்ட விளக்கையும் கொண்டது இது. மீனவர்களுக்கு ஆழ்கடலில் 720 கி.மீ தூரத்திற்கு தகவல் பரிமாற, கடலில் தட்பவெப்பநிலை மாற்றங்கள், வானிலை எச்சரிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவை குறித்த தகவல்களை நேரடியாக கப்பல்களுக்கு அச்சு வடிவில் தெரிவிக்கும் வகையில் ‘நவ்டெக்ஸ்’ என்ற தகவல் தொடர்பு திட்டம் இங்கே உள்ளது. இது இந்திய அளவில் 7 இடங்களிலும், தமிழ்நாட்டில் 2 இடங்களிலும் உள்ளது. அதில் பரங்கிப்பேட்டையும் ஒன்றாகும். இந்த கலங்கரை விளக்கம் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இயங்குகிறது.மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது நபர் ஒருவருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கடலூர் மாவட்டத்தில்  உள்ள பிச்சாவரத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள், தங்களின் பயணத்திட்டத்தில் அருகில் உள்ள பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கத்தையும் சேர்த்துக் கொண்டு பார்த்தால் இயற்கை எழில் கொஞ்சும் சுரபுன்னை காடுகளின் அழகு மற்றும் பரந்து விரிந்து  அலைகளுடன் ஆர்ப்பரிக்கும் வங்காளவிரிகுடா கடலையும் ஆனந்தமாக ரசிக்கமுடியும், குழந்தைகளுக்கும்  குதூகலமாக இருக்கும்.