ஆனி மாதத்தை, நீண்ட பகல் பொழுது கொண்ட மாதம் என்றும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பகல் பொழுது நீளும் என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு. இப்படியான பெருமை மிகுந்த ஆனி மாத்தில், ஆனி உத்திர விரதமே பிரசித்தம்.
திருமஞ்சனம் என்றால் மகாபிஷேகம்!
திருமஞ்சனம் என்றால், மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி என்று ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை பெறுகிறது. இப்படியான சிறப்புகளில், சந்தியா காலங்களாக விளங்கும் ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகதந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறையே விசேசமாக அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
இவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது.இந்த 2 விசேஷ நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே, அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள், பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே ஆனி திருமஞ்சனமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
ஆனித் திருமஞ்சனத்தில் சிறப்புகள் வருமாறு!
என்றும் ஒளி குன்றாமல் வடக்கில் தோன்றி வழிகாட்டும் துருவ நட்சத்திரத்திற்கு உரிய சிறப்பு உத்திர நட்சத்திரத்திற்கு உண்டு என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் துருவ நட்சத்திரமானது தனது துணை நட்சத்திரங்களுடன் சிதம்பரம் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு மேலாக காட்சியளிக்கும் என பழமையான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வெளிவரும் காஸ்மிக் ரேய்ஸ் எனப்படும் “வானியல் கதிர்கள்” நம் உடலில் பட்டால் மனதிற்கு உறுதியும்,நினைத்ததை முடிக்கும் ஆற்றலும் கூடும். அதோடு அதிகாலையில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் சிறப்பும் சேரும் போது அதனால் உண்டாகும் நற்பலன்ங்களை அளவிட இயலாது. ஆனித் திருமஞ்சனத்தன்று மிகவும் விசேஷமான பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் அன்று மதியம் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆனந்த நடனம் ஆடியபடி சித்சபைக்கு செல்லும் திருக்காட்சியே மகாதரிசனம் எனப்படுகிறது. அந்த நேரத்தில் இறைவனை நாம் தரிசிக்கும் போது உடலும் மனதும் சீராகி நம்மை ஆரோக்கியமாக இயங்க வைக்கின்றன இவை அனைத்துக்கும் மேலாக ஆனித் திருமஞ்சனத்தன்று அதிகாலை எழுந்து நீராடிவிட்டு தூய மனதுடன் நமச்சிவாய மந்திரத்தை ஓதினால் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.