நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிகள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழி பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி தொடர் போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்,போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குல தெய்வக்கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன்,பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”
குலதெய்வம்.
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…