தில்லை வனமாக இருந்த சிதம்பரத்தில் பல மகான்கள் இங்கு தவமிருந்து இறைவனடி சேர்ந்துள்ளனர்.அப்படி பல காலம் சிதம்பரத்தில் தவமிருந்து இறைவனடி சேர்ந்தவர் ஸ்ரீலஸ்ரீஅவதூத சுவாமிகள். அவதூத சுவாமிகள் பல காலம் இமயமலைப் பகுதிகளிலும், நேபாளத்திலும் சுற்றித்திரிந்தும் தவத்தில் ஈடுபட்டும் இருந்து வந்துள்ளார்கள். இமயமலையில் அவதூத சுவாமிகளின் குரு அவரை சிதம்பரம் செல்லுமாறு கூறியுள்ளார்கள். அப்போது குருவின் உத்தரவுபடி சிதம்பரம் புறப்பட்ட அவதூத சுவாமிகள் சிதம்பரம் வரும் வழியில் திருக்கோவிலூரில் உள்ள ஞானானந்தகிரி தபோவனத்தில் சில காலம் தங்கியிருந்தார். அதன் பின்னர் சிதம்பரம் வந்த சுவாமிகள் அங்கேயே தங்கிவிட்டார். சிதம்பரத்திற்கு வரும்போது சுவாமிகள் அவதூத நிலையிலே தென்பட்டதாக கூறப்படுகிறது. அவதூதம் என்றால் நிர்வாணம் எனக் கூறப்படுகிறது. இதனால் இவர் சிதம்பரம் வந்த போது தொடக்க காலங்களில் சிறுவர்கள் சுவாமிகளை கல்லால் அடித்தும் மண் போன்றவற்றை எரிந்தும் ஓட ஓட விரட்டியும் மிகுந்த இன்னல்களை தந்துள்ளனர். நாளடைவில் சுவாமிகள் ஒரு பெரிய மகான் என்பதை அவருடைய செயல்களின் மூலம் யாவரும் உணர்ந்தனர்.பெரும்பாலும் அவதூத சுவாமிகள் சிதம்பரம் நடராஜர் கோயில் கீழகோபுர வாயில் அருகே உள்ள மாணிக்க விநாயகர் சன்னதி அருகில் தான் உட்கார்ந்து தியானத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. அப்போது சுவாமிகளை தரிசித்தவர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 1965ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி அதாவது தமிழ் மாதம் ஆணி 6ம் தேதி சதயம் நட்சத்திரத்தன்று சிதம்பரம் கீழவீதியில் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலுக்கு எதிர் புறம் சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார். இதனை அறிந்த சுவாமிகளின் சிஷ்யரான கேரள மாநிலம் திருவனந்தபுரம் போத்தங்கோடு அப்புகுட்டன் சுவாமிகள் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த ஆன்மீக அன்பர்களும் சேர்ந்து அவதூத சுவாமிகளுக்கு ஒரு ஜீவசமாதியை ஏற்படுத்தினார்கள்.
ஜீவசமாதி!
சிதம்பரம் கஞ்சி தொட்டி மேற்கு பகுதி குரு தெருவின் வடகோடியில் இருக்கும் நந்தவனப் பகுதியில் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகளுக்கு ஜீவசமாதி உருவானது. இந்த ஜீவசமாதியில் தினமும் இரண்டு கால பூஜையும்,வியாழக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் அன்னதானங்களும் நடைபெறுகின்றன. இங்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவதால் வியாழக்கிழமைகளில் இந்த ஜீவசமாதியில் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் இங்கு பலர் அவதூத சுவாமிகள் திருவருவப் படத்திற்கு முன்பு தியானத்தில் ஈடுபடுகின்றனர்.
குருபூஜை.
ஒவ்வொரு ஆண்டும் அவதூத சுவாமிகள் இறைவனடி சேர்ந்த ஆனி மாதம் சதய நட்சத்திரத்தில் அவருடைய குருபூஜை ஜீவ சமாதியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குருபூஜையன்று சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதோடு பக்தர்களுக்கு தலைவாழை இலை போட்டு அன்னதானம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அவதூத சுவாமிகளின் குருபூஜையில் வந்து கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தம்!
சென்னை, புதுவை, விழுப்புரம், கடலூர் மார்க்கத்தில் பேருந்தில் வருபவர்கள் வடக்கு மெயின் ரோடு கஞ்சி தொட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சின்னகடைத் தெரு செல்லும் சாலையில் குரு தெரு வழியாக நந்தவனம் பகுதியில் பகுதியில் உள்ள அவதூத சுவாமிகள் ஜீவசமாதிக்கு செல்லலாம்.