சிதம்பரம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஆடல்வல்லான் அருள்பாலிக்கும் நடராஜர் கோயில் தான். அதுபோல நெய்வேலி என்று சொன்னாலே நிலக்கரி நிறுவனமும், மிகப்பெரிய நடராஜர் சிலையும் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் உலோகச்சிலை இக்கோயிலில் அமைந்துள்ளது. 10 அடி உயரத்தில் நடராஜர் சிலையும், 7அடி உயரத்தில் சிவகாமி தேவியின் சிலையும் இக்கோயிலில் அழகுற காட்சி தருகிறது.
ஐவரால் அமைந்த பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகம்.
நெய்வேலியில் நடராஜர் கோயில் அமைந்ததே மிகவும் சுவாரஸ்யமானது. நெய்வேலி வட்டம் 16ல் திருமுறை பாராயணம் வழிபாடு செய்வதற்காக நண்பர்கள் இராசப்பா,பால்வண்ணன், கங்காதரன், தியாகராஜன்,சீனுவாசன் ஆகிய ஐவரும் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். தேவாரத்தில் ஈடுபாடுடைய பலர் ஒருங்கிணைந்தனர். 1983ல் பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம் என்று அமைப்பு உருவானது. தமிழக காவல்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பஞ்சாபகேசன் அப்போது நெய்வேலியில் ஒற்றாடல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழக புரவலராக இருந்த ராமலிங்கம் தான் ஓய்வு பெற்று விட்டதால் நமது கழகத்திற்கு புரவலராக பஞ்சாபகேசன் அவர்களை வைத்துக் கொள்ளுங்கள் என கூறி அவரின் ஒப்புதலை பெற்று தந்தார். போலீஸ் அதிகாரி பஞ்சாபகேசன் புரவலராக பொறுப்பேற்ற பிறகு பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழக பணிகள் நெய்வேலி நகரில் புகழ்பெற்றது.
திருமுறை பாராயணத்திற்காக தற்காலிகமாக அமைந்த இடத்தில் மிகப் பிரமாண்டமான உருவான நடராஜர் கோயில்!
பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழக புரவலராக பொறுப்பேற்ற போலீஸ் அதிகாரி பஞ்சாபகேசன் அவர்களின் சிறிய முயற்சியாலும் மற்றும் கழக நிர்வாகிகள் உழைப்பினாலும் நெய்வேலி வட்டம் 16ல் சுமார் 10 அடி உயரத்தில் நடராஜர் திருமேனியுடன் நடராஜர் கோயில் பிரமாண்டமாக உருவானது.இக்கோயிலில் நடராஜர் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்ற பெயரில் அருள்பாலித்து வருகின்றார். மேலும் இக்கோயிலில் லிங்க வடிவில் செம்பொற்சோதிநாதர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள நடராஜர் சிலை பல்வேறு மூலிகைகள் மற்றும் பஞ்சலோகம் (ஐந்து உலோகங்கள்) கொண்டுள்ள விதிகளுக்கு இணங்க செதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் ஆகிய இரு முனிவர்களும் சிவபெருமானுக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காணலாம் நெய்வேலியில் உள்ள நடராஜர் கோயிலில் சிவபெருமானின் முன் சூரியனும், பைரவரும் உள்ளனர். பைரவருக்கு 10 கைகள் மற்றும் தசபுஜ பைரவர் என்ற பெயர் உள்ளது. இக்கோயிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கோயில் கட்டிடத்திற்கான பூமி பூஜை 1986 ல் செய்யப்பட்டு, அதே ஆண்டில் மெழுகு வேலை தொடங்கியது. 1987 ம் ஆண்டு இக்கோயில் பளிங்கு சபையாக கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பொதுவாக சிவன் கோயில்களில் 63 நாயன்மார்கள் வரிசையாக இருப்பது வழக்கம். ஆனால் நெய்வேலி நடராஜர் கோயிலில் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக தங்கள் பிறந்த நட்சத்திரத்துடன் தொடர்புடைய துறவியை வழிபட தேர்வு செய்கிறார்கள்.
இக்கோயிலில் விநாயகர், சந்திரசேகரர், பார்வதி தேவி மற்றும் மகான்கள் மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் ஆகியோரின் சிலைகள் உள்ளன. நடராஜப் பெருமானின் சன்னதிக்கு மேற்கே செம்பொற்சோதிநாதர் சன்னதி உள்ளது.
மனுநீதி என்ற பழங்கால நடைமுறையைப் பின்பற்றி, பக்தர்கள் தங்கள் துயரங்களை ஒரு காகிதத்தில் எழுதி அதில் வைத்து மூன்று முறை மணியை அடிக்க ஒரு பிரார்த்தனை பெட்டி உள்ளது. இந்த மனுக்களை தீட்சிதர்கள் காலை பூஜை செய்யும் போது சேகரித்து சிவபெருமானின் முன் ரகசியமாக வாசித்து நெருப்பில் கொளுத்துவார்கள். பக்தர்கள் தங்கள் விருப்பத்தை உணர்ந்த பிறகு, நன்றி கடிதம் எழுதி பெட்டியில் போடுகிறார்கள்.நெய்வேலி நடராஜர் கோயிலில் பூஜை நெய்வேலி நடராஜர் கோயில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பக்தர்களுக்காக திறந்திருக்கும். இக்கோயிலில் திருப்பள்ளியெழுச்சி பூஜை, காலசாந்தி பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை, இரண்டம் கால பூஜை, அர்த்தஜாம பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்களின் குருபூஜை நாட்களில் சிறப்பாக செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
4வது முறையாக 2024ல் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்.
நெய்வேலி நடராஜர் கோயிலில் நான்காவது முறையாக கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்றது.திருப்பணிகள் முடிவடைந்து. 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.