“வீரமார்த்தாண்ட கூத்தாண்டவர்”என்று போற்றப்படும் அரவானுக்கு தமிழ்நாட்டில் பல கோவில்கள் இருந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. ஆனால் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டை கடந்த கூத்தாண்டவர் கோவில் என்றால் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் பகுதியில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவிலில் தான் என கூறுகின்றனர் முன்னோர்கள். இக்கோவில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இசைக் கல்லூரியின் அருகாமையில் அமைந்துள்ளது.
ஐந்தாம் வேதமாக கருதப்படும் மகாபாரதத்தின் கதாநாயகர்களான பாண்டவர்கள் ஐவரில் நடுவில் பிறந்தவனான அர்ச்சுனன், தனது நாடான இந்திரபிரஸ்தத்திலிருத்து பாரத தேசத்தின் வடகிழக்கு மூலையில்உள்ள நாகலோகத்திற்கு வனவாசமாக தீர்த்த யாத்திரை சென்றான். அங்கு அர்ச்சுனன் கங்கை நதியில் தீர்த்தமாடும் போது அந்த நாகலோகத்தின் இளவரசியான நாககன்னி அர்ச்சுனன் மீது மோகம் கொண்டாள். அவள் அர்ச்சுனனை மயக்கி தனது நாகலோகத்திற்கு கடத்தி சென்று, வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்து கொண்டு அரவான் (அரவு – நாகம்; நாககன்னிக்கு பிறந்ததால் அரவான்) என்ற ஒரு மகனை பெற்றெடுத்தாள்.
பிறகு 12 ஆண்டு கால வனவாசம் முடிந்து அர்ச்சுனன் தனது நாடான இந்திரபிரஸ்தத்திற்கு திரும்பும் போது தனது மகனான அரவானையும் உடன் அழைத்து செல்ல நாகக்கன்னியிடம் கேட்டான். அதற்கு அவளோ, “இவ்வூர் வழக்கப்படி எனது மகன் அரவான் தான் இந்த நாகலோக அரசின் வாரிசு. எனவே, அவனை உங்களோடு அனுப்ப முடியாது” என்று கூறி விட அர்ச்சுனன் “அரவானை அழைத்து செல்வதில்லை” என்று உறுதி கொடுத்துவிட்டு கவலையோடு தனது நாடான இந்திரபிரஸ்தம் திரும்பினான். அங்கு அரவான் தனது தாயின் பாதுகாப்பில் வளர்ந்து நாகலோக அரசின் வாரிசாக முடிசூட்டப்பட்டு பல வளங்களுடனும், அதிகாரத்துடனும் கூடிய அழகிய அரண்மனையில் சிறப்பாக ஆண்டு வந்தான். வளர்ந்த பின்னர் அரவான் ஒரு போரில் தனது தாயை காயப்படுத்திய கூத்தாசூரன் என்ற அசுரனை கொன்றதால், அவனது தாய் அரவானுக்கு கூத்தாண்டவர் (கூத்தாசூரனை கொன்றவர்) என்ற புதிய பெயரை வழங்கி ஆசீர்வதித்தாள்.
பின்னர் வருடங்கள் பல கடந்து மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வான குருஷேத்திர யுத்தம் தொடங்கியது. கவுரவர்களின் தலைவனும், பாண்டவர்களின் எதிரியுமான துரியோதனன் தான் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, யுத்தம் தொடங்குவதற்கு முன்பே யுத்த தெய்வமான காளிக்கு ஒரு வெள்ளை யானையை பலி கொடுத்தான். எனவே, அதனை ஈடு செய்ய பாண்டவர்கள் அதை விட மிகப்பெரிய ஒரு பலியை காளிக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட இறுதியில் “களப்பலி” கொடுக்கும் முடிவிற்கு பாண்டவர்கள் வருகின்றனர்.
32 அங்க லட்சணங்களும் ஒருங்கே அமைய பெற்ற உடலை உடைய ஒரு ஆணழகனை அவனுடைய முழு சம்மதத்துடன், யுத்த தெய்வமான காளிக்கு யுத்த களத்தில் பலி கொடுப்பதற்கு பெயரே “களப்பலி” ஆகும். அன்றைய சூழலில் இந்த தகுதியை உடைய அழகன்கள் இருவரே ஆவர். ஒருவர் ஆணழகனான கூத்தாண்டவர்; இன்னொருவர் கந்தர்வ பேரழகனான பகவான் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா. இந்த அகிலத்தையே படைத்து ஆளும் அந்த விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ண பரமாத்மாவை களப்பலி கொடுப்பதென்பது இயலாத காரியம் என்பதால், கூத்தாண்டவரை பலி கொடுக்க பாண்டவர்கள் முடிவு செய்ய அவரும் அதற்கு முழு சம்மதம் அளிக்க பதிலுக்கு பகவான் கிருஷ்ண பரமாத்மாவிடம் கூத்தாண்டவர் 3 வரங்களை மட்டும் வேண்டுகிறார்.
“என்னென்ன வரங்கள்?”
*என்னை பலி கொடுப்பதற்கு முன்பு நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
*என்னை பலி கொடுத்த பின்பும் வெட்டுண்ட எனது தலைக்கு உயிர் இருக்க வேண்டும்.
*அந்த தலையில் உள்ள கண்களின் மூலம் 18 நாள் மகாபாரத போர் முழுவதையும் நான் பார்க்க வேண்டும்.
பகவான் கிருஷ்ண பரமாத்மாவும் கூத்தாண்டவர் வேண்டிய இந்த 3 வேண்டுதல்களையும் ஏற்று கொண்டு அவருக்கு வரமளித்து அருள் புரிந்தார்.
“களப்பலி”
களப்பலி கொடுக்க நாளையே இறுதி நாள் என்பதால் கூத்தாண்டவர் பெற்ற முதல் வரத்தை நிறைவேற்ற, அன்று இரவே அவசர அவசரமாக அவருக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. விடிய விடிய ஊர் ஊராக தேடியும் நாளை களப்பலியாக போகும் கூத்தாண்டவரை திருமணம் செய்து கொண்டால், விதவையாவது நிச்சயம் என்பதால் எந்த பெண்ணும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்த சிக்கலை தீர்க்க கிருஷ்ணர் தனது முழு பூர்ண யோக மாயா சக்தியை பயன்படுத்தி திருநங்கையை தோற்றுவிக்க விடிந்தவுடன் கூத்தாண்டவருக்கும், அந்த திருநங்கைக்கும் கிருஷ்ணர் முன்னிலையில் அவர் ஆசியுடன் திருமணம் நடந்தது.
காலையில் திருமணம், இரவில் களப்பலி!
காலையில் திருமணம் முடிந்ததும் அன்று இரவே களப்பலிக்கு கூத்தாண்டவர் தயாராக யுத்த தெய்வமான வீரமாகாளி தானே தனது பலியை தேடி, கூத்தாண்டவரின் இருப்பிடத்திற்கே வந்து அவரை தனது இருப்பிடமான வடதிசையில் உள்ள குருஷேத்திர யுத்த களம் நோக்கி அழைத்து சென்றாள். அங்கு கூத்தாண்டவர் தனது மார்பு கவசத்தையும், அணிகலன்களையும் நீக்கிவிட்டு காளியை வணங்கி நிற்க காளி கூத்தாண்டவரின் தலையை வெட்டினாள். பின்னர் பாண்டவர்கள் ஐவரில் மூத்தவரான தர்மர் கூத்தாண்டவரின் அந்த வெட்டுண்ட தலையை காளிக்கு படைக்க, காளியும் அந்த பலியை தனது முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு பாண்டவர்கள் குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற அருள்புரிந்தாள்.
பின்னர் அங்கு பகவான் கிருஷ்ண பரமாத்மா தோன்றி தர்மருக்கு காட்சியளித்து, காளிக்கு படைக்கப்பட்ட கூத்தாண்டவரின் அந்த வெட்டுண்ட தலைக்கு மட்டும் உயிர் கொடுத்து, கூத்தாண்டவர் பெற்ற இரண்டாவது வரத்தை நிறைவேற்றினார். பின்னர் தலையில் உள்ள கண்களின் மூலம் 18 நாள் மகாபாரத போர் முழுவதையும் பார்க்கும் வண்ணம் கூத்தாண்டவரின் அந்த வெட்டுண்ட தலை, குருஷேத்திர யுத்த களத்திலிருந்த ஒரு மலையின் உச்சியில் உயர்த்தி வைக்கப்பட்டு கூத்தாண்டவர் பெற்ற மூன்றாவது வரத்தையும் பகவான் கிருஷ்ண பரமாத்மா நிறைவேற்றினார்.
இப்புராணத்தின் அடிப்படையில் பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற்றவனும், பகைவனுக்கும் அருளும் பண்புள்ளம் படைத்தவனும், உயிரை கொடை கொடுக்கும் உத்தமனுமான அரவான் என்னும் வீரமார்த்தாண்ட கூத்தாண்டவர் 32 அங்க லட்சணங்களும் ஒருங்கே அமைய பெற்றவர் என்பதால் அவருக்கு வடதமிழகம் முழுவதும் 32 திருக்கோயில்கள் உள்ளன. இந்த 32 திருக்கோயில்களுக்கும் தலைமை பீடமாக விளங்குகிறது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில். அதற்கு இணையாக போற்றப்படுகிறது கடலூர் மாவட்டத்திலுள்ள கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில். இந்த இருபெரும் கோயில்களுக்கும் அடுத்த படியாக நமது சிதம்பரத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கூத்தாண்டவர் திருவிழாவாக, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கூத்தாண்டவர் கோவில் விழா நூற்றாண்டுகளை கடந்து சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டு வருகிறது.
திருவிழாவால் களைகட்டும் திருவேட்களம்.
ஆண்டுதோறும் இத்திருவிழாவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் திருக்கல்யாணம் மற்றும் களப்பலி வரையில் இத்திருவிழாவில் மேற்கண்ட புராணத்தின் நிகழ்வுகள் உற்சவ வடிவில் நிகழ்த்தி காட்டப்படுவது தனி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.