தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவெண்காடு. இங்குள்ள கோயிலில் பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலித்து வருகின்றார்.இத்தலம் சமயக்குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலம்.
“காசிக்கு நிகரான புண்ணியத்தை தேடித்தரும் கோயில்” என்ற பெருமை இதற்கு உள்ளது. இந்த கோயிலில் இருக்கும் ருத்ர பாதத்தினை, வழிபட்டால் 21 தலைமுறையினர் செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது சாஸ்திரம். காசியில் விஷ்ணு பாதம். திருவெண்காட்டில் ருத்ர பாதம். சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
“திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர்”. வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது. கோயிலின் மேற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் அருள்பாலிக்கிறார் அகோரமூர்த்தி. அகோரமூர்த்தியின் திருவுருவைக் காணக்கண்கோடி வேண்டும். இவர் கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக்கக்க கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு மணிமாலை அணிந்து கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
அகோரமூர்த்தி வரலாறு!
மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு பல துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். அசுரன் வெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப்பின் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினான். இது பற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றிலிருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்டமாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட இடபதேவரை சுவேதாரண்யேஸ்வரர் ஆட்கொண்டார்.
“நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம்”.அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும்போது அதை பார்க்க முடியும்.
“மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றிய இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் விழா ஐந்தாம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது”.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரபூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாக பூஜை நடைபெறுகின்றது.
*அகோரமூர்த்தி சன்னதிக்கு எதிரே அமைந்த சன்னதி ஒன்றில் சுவேதமகாகாளி அழகிய வீரக்கோலத்தில் வீற்றிருப்பதையும் காணலாம்.
*கல்விக்கும், தொழிலுக்கும், அதிபதியாக இருக்கும் புதன் பகவானுக்கு இத்தலத்தில் தனி ஆலயம் உண்டு*. சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்தவர் புதன். சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகபதம் அடைந்தவர். சந்திரன் புதனுடன் திருவெண்காட்டை அடைந்து சுவேதாரண்ய பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், சயரோகத்தையும் நீங்க பெற்றான். *புதன் திசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும். திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைக்கூடும்.
புதன் ஸ்தலம்.
*புதன் பகவானை வழிபடுவதற்கு முன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரை வழிபட்டு, அதன் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, அதன் பின்பு இறுதியாகத் தான் புதன் பகவானை வழிபட செல்ல வேண்டும்.
“சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி”ஆகிய மூன்று சிவமூர்த்திகள் உள்ளது.பிரம்ம வித்யாம்பிகை, சுவேத மகாகாளி, செளபாக்கிய துர்க்கை ஆகிய மூன்று சக்திகள்,அக்கினிதீர்த்தம், சூரியதீர்த்தம், சந்திரதீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தக்குளங்கள், வடஆலமரம், கொன்றை, வில்வம் ஆகிய மூன்று விருட்சங்கள் என அனைத்தும் மூன்றாக அமைந்த சிறப்புடையது இத்தலம்.
“திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது”. சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.
இத்தலத்தில் “சிவஞானபோதம்” எனும் தலையாய சைவசித்தாந்த நூலை அருளிய மெய்கண்டாருக்கு தனி சந்நிதி உள்ளது. பிள்ளைப்பேறு வேண்டி இவரது பெற்றோர் இத்தலத்தின் குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வணங்க, அவர்களுக்கு இறையருளால் பிறந்தவர் “மெய்கண்டார்” என்பது குறிப்பிடத்தக்கது.இத்தலத்தில் பிரமபீடம் உள்ளது. வழிபட்ட பிரமனுக்கு இங்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். ஆதலின் அம்பாளுக்குப் பிரம்ம வித்யாம்பாள் என்று பெயர் வந்தது.சந்திரதீர்த்தத்தின் கரையில் வடகால (வட ஆல) மரமுள்ளது. மிகப்பெரய விசாலமான மரமாகத் தழைத்து விளங்குகின்றது. மரத்தினடியில் விநாயகரும், அவருக்கெதிரில் ருத்ரபாதம் என்னும் பெயரில் இருதிருவடிகள் செதுக்கப்பட்டும் உள்ளன. சந்திரன் வழிபட்ட லிங்கமும் உள்ளது.
“இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூ.லத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக – அகோரராக – அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.”
“நடராசசபை தில்லையைப்போலச் செப்பறையில் அமைந்துள்ளது. உள்ளே உள்ள ஸ்படிகலிங்கத்திற்குத் தில்லையப்போல் நாள்தோறும் பூசை நடைபெறுகிறது. சிதம்பர ரகசியமும் உள்ளது.”
“துர்க்கை மேற்கு நோக்கியிருப்பது இங்கு விசேஷமானது. திருமணமாகாதோர் இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொள்வது மரபாக இருந்து வருகின்றது.”
மூலவர் சுகாதாரண்யேஸ்வரர் சந்நதி!
“மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் சந்நதி சற்றுயர்ந்த பாணம்”. அழகான திருமேனி. வழிபடுவோர்க்கு வளமும், அமைதியும் நல்கும் சந்நதியாக உள்ளது.
முதலாம் இராஜராஜசோழன் காலத்திய (கி.பி.985 -1014) கல்வெட்டு இங்கு உள்ளது. ஆதலால் இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்க வேண்டும்.கோயில் மிகப்பெரிய பரப்பளவில்,சுற்று மதில்களுடன் அழகாக அமைந்துள்ளது.
திருவெண்காடு சீர்காழியிலிருந்து 14 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கை மடம் செல்லும் நகரப் பேருந்து திருவெண்காடு வழியாகச் செல்கிறது. சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் நகர பேருந்து திருவெண்காடு வழியாக செல்கிறது.