சிதம்பரத்தில் ராமர் கோவில்!


சிதம்பரம் மேலவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவில்.

கோவில் நகரமான சிதம்பரம் நகரம் சைவம் மற்றும் வைணவம் ஆகிய  இரண்டிற்கும் பெயர் பெற்றது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடல் வல்லான் கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜபெருமானையும், சயன கோலத்தில் அருள்பாலித்து வரும் கோவிந்தராஜப் பெருமாளையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம். வேறு எங்கும் இது போன்று காண முடியாது.

ஸ்ரீ கோதண்டராமர் கோவில்!

ஸ்ரீ கோதண்டராமர் கோவிலின் வெளிப்பிரகாரம்.

சிதம்பரம் மேலரத வீதியில் பேரூந்து நிறுத்தம் அருகே சிறை மீட்ட விநாயகர் கோவிலை அடுத்து நூற்றாண்டு கண்ட  மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமர் கோவில் உள்ளது. இக் கோவில் திருச்சித்ரக்கூடம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் மிகப்பெரிய வெளி சுற்று பிரகாரத்துடன் அமைந்துள்ளது.

ராமர், சீதை, லட்சுமணன்!

ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் அருள்பாலிக்கும் ராமர் சீதை லட்சுமணன்.

கோதண்டராமர் கோவிலில் உள்ளே நுழைந்தவுடன் ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. கோவில் உள்ளே கொடி மரத்துக்கு அருகில் கருடாழ்வார் காட்சி அளிக்கின்றார். இதனைத் தொடர்ந்து சென்றால் கருவறைக்கு இடது புறம் வரதராஜ பெருமாள் வலது பக்கம் ஸ்ரீ பெருந்தேவி தயார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கோவில் கருவறையில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கோவில் வெளி பிரகாரத்தில்  சப்தமாதர் சன்னதி உள்ளது.

ஆண்டுதோறும் ராமநவமியை பிரம்மோத்சவம்!

சிதம்பரம் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிதம்பரம் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா 10 தினங்கள் வெகு சிறப்பாக நடைபெறும். பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சாமி இது வேளையும் வீதி உலா செல்வது வழக்கம். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டமும், அதனை தொடர்ந்து அன்று மாலை சீதா கல்யாணமும் வெகு விமர்சையாக நடைபெறும்.அதற்கு அடுத்த தினம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உத்சவமும், பட்டாபிஷேகமும், அதனை தொடர்ந்து இரவு புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடைபெறும்.

சிலம்பர ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.

கோதண்டராமர் கோவில் செல்லும் வழி!

ஸ்ரீகோதண்டராமர் கோவில்.

சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக சிதம்பரம் வருபவர்கள் சிதம்பரம் கஞ்சி தொட்டி பேரூந்து நிறுத்தத்தில் இறங்கி மேலவீதி பேரூந்து நிறுத்தம் அருகே உள்ள கோவிலை சில நிமிடங்களில் அடையலாம். திருச்சி, மயிலாடுதுறை, சீர்காழி மார்க்கமாக வருபவர்கள் சிதம்பரம், தெற்குவீதி, பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேலவீதியில் உள்ள ராமர் கோவிலுக்கு எளிதாக செல்லலாம்.