தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் “திருமணிமாடம்” அல்லது “திருமணிமாடக் கோவில்” எனப்படும் சாச்வததீப நாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோவிலாகும். 108 திவ்ய தேசங்களில் ஆறு கோவில்கள் திருநாங்கூரிலும் ஐந்து கோவில்கள் திருநாங்கூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநாங்கூரில் கருட சேவை உற்சவம்.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் சன்னதியில் நடைபெறும் கருட சேவை திருவிழாவிற்கு திருநாங்கூர் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 11 கோவில்களில் உள்ள உற்சவர்கள் எழுந்தருளச் செய்யப்படுவார்கள். இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்யப்படுவார்கள். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்யப்படுவார்.
11 பெருமாள்கள் ஒரே இடத்தில் தரிசனம்.
திவ்ய தேச கோவில்களான திருகாவளம்பாடி ஸ்ரீ கோபாலகிருஷ்ணன், திருஅரிமேய விண்ணகரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், திருவண்புருடோத்தமம் ஸ்ரீ புருஷோத்தம பெருமாள், திருச்செம்பொன்செய் கோவில் ஸ்ரீ செம்பொன்னரங்கர், திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாள், திருவைகுந்த விண்ணகரம் ஸ்ரீ வைகுந்தநாதர், திருத்தேவனார்த்தொகை ஸ்ரீ மாதவப்பெருமாள், திருத்தெற்றியம்பலம் ஸ்ரீ ரங்கநாதர், திருமணிக்கூடம் ஸ்ரீ வரதராஜர், திருப்பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் இருந்து பெருமாள்கள் மேளதாளங்களுடன் புறப்பட்டு நாங்கூர் மணிமாடக் கோவில் முன்பு எழுந்தருளச் செய்யப்படுவார்கள்.
11 பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை.
திருநாங்கூர் மணிமாடக் கோவிலில் எழுந்தருளச் செய்யப்பட்ட 11 பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் மணவாள மாமுனிகள் சகிதம் எழுந்தருளி தீபாராதனை காண்பித்து கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில் பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம் என்பதால் திருநாங்கூரில் நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.