பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்கள் வரிசையில் எழுபதாவது தலமாகவும், முக்தி தரும் தலங்களில் ஒன்றாகவும் உள்ள திருவாஞ்சியம்(ஸ்ரீவாஞ்சியம்)காசிக்கு சமமாக கருதப்படுகிறது. திருவாஞ்சியம் காசியை விட 116 பங்கு மேலானதாக கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்தில் இருந்து புறப்பட்டு பிரளயத்தில் அழியாது தப்பிய காசியை பார்த்து வியந்தனர்.அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளது என்று தேடி வந்தனர். அப்போதுதான் காவிரி கரையில் திருவாஞ்சியம் என்ற ஊரை கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாக சிவபெருமானும், ஞானசக்தியாக பார்வதி தேவியும் அவ்வூரில் கோயில் கொண்டுவிட்டனர். இக்கோவிலில் மங்களநாயகி சமேத வாஞ்சிநாதர் அருள் பாலித்து வருகின்றார். இக்கோவிலில் மூன்று கோபுரங்களும் மூன்று பிரகாரங்களும் உடையது.பிரதான ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.
குப்தகங்கை தீர்த்தக்குளம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் இருந்து மேற்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொண்டீச்சரம் தாண்டிச் சென்றால் திருவாஞ்சியம் கிராமத்தை அடையலாம். திருமால் தன்னை விட்டுப் பிரிந்த லட்சுமியை சிவபெருமானை பூஜித்து வாஞ்சையுடன் பெற்ற ஊர். எனவே இதற்கு திருவாஞ்சியம் என ஆயிற்று. இத்திருக்கோவிலில் வடக்கே குப்தகங்கை என்னும் பெருங்குளம் உள்ளது. கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமையில் இக்குளத்தில் நீராடுவது சிறப்பு எனினும், கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நீராடுவது பெரும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.காசிக்கு ஒப்பாக கூறப்படும் தென்னாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று.
இக்கோவிலில் எமதர்மராஜனுக்கு தனி சன்னதி.
திருவாஞ்சியம் திருக்கோவிலில் எமதர்மராஜனுக்கும்,சித்திரகுப்தருக்கும் தனி சன்னதி இருப்பதும் ஒரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் நீங்கும் பொருட்டு எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும் பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இறைவனும் உயிர்களைப் பறிக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்று வேண்ட அவ்வாறே அருளி இத்தலத்தில் ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்று வரமும் அளித்தார். அதன்படி இக்கோவிலில் நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரண பயம்,மனக்கவலை உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால் அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இங்கு எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோயில் மூடப்படுவதில்லை.
இக்கோவிலின் உள்பிரகாரத்தில் சன்னதி கொண்டுள்ள பைரவர் இங்கு யோக நிலையில் காணப்படுகிறார்.பைரவர் சன்னதிக்கு அடுத்து ராகு,கேது சன்னதி அமைந்துள்ளது. ராகு,கேதுவிற்கு பாலபிஷேகம் செய்யும்போது பால் நீல நிறமாக மாறி விடுவதாக கூறப்படுகிறது.இங்கு வந்து வழிபட்டால் திருமண தடைகளை நீங்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள்பாலிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. இத்தல விநாயகர் அபயங்கர விநாயகர் என்ற பெயருடன் இங்கு விளங்குகிறார். சண்டிகேஸ்வரர் இங்கு எம சண்டிகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கோவிலின் தல விருட்சமாக சந்தன மரம் உள்ளது.
கோவில் கும்பாபிஷேகம்.
திருவாஞ்சியம் திருக்கோவிலில் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில் திறந்திருக்கும் நேரம்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவாஞ்சியம் கோவில் தினந்தோறும் காலை 6:00 மணி முதல் பகல் 12.00மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.