முசுமுசுக்கை என்பது ஒரு கொடி வகையைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் முகியா மேடரசுபட்டானா (Mukia maderaspatana). சிறுக்கொடி தாவரமான முசுமுசுக்கை சொரசொரப்பான சுனைகள் கொண்டது. இதன் இலைகள் மற்றும் வேர்களை தொட்டால் முசுமுசுவென இருப்பதால் இதற்கு முசுமுசுக்கை என பெயர் பெற்றது.இதன் இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முசுமுசுக்கை சாதாரணமாக வேலிகள், புதர்களில் பெருமரங்களை சுற்றி வளர்கின்றது. ஏதேனும் ஒரு பிடிப்பை பற்றி கொண்டு கொடியாக படர்ந்து பசுமையாக மிதந்து செல்லும் மூலிகை முசுமுசுக்கை.இதன் இலை மற்றும் வேர் மருத்துவ பயன் மிக்கவை. முசுமுசுக்கை துவர்ப்பு,கார்ப்பு சுவைகளும் வெப்ப தன்மையும் கொண்டது. வள்ளலார் சிறப்பாக விளக்கியுள்ள மூலிகைகளில் முசுமுசுக்கையும் ஒன்றாகும்.
சளி, இருமலை போக்கும் முசுமுசுக்கை.
முசுமுசுக்கை வேர் பசியை அதிகரிக்க செய்யும்.நஞ்சை நீக்கும், சளியை அகற்றும்,ஆண்மையை அதிகரிக்கும். முசுமுசுக்கை இலை கோழையை அகற்றும். இருமல், இரைப்பு,ஜலதோஷம் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. பித்தம் அதிகமாவதால் ஏற்படும் இறைப்பு கட்டுப்படும். பனிக்காலத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகளையும் நீக்கும் தன்மையுடையது. வல்லாரைக் கீரை போல் ஞாபக சக்தி அதிகரிக்க செய்து மூளையை பலப்படுத்தும். இதன் இலையை பறித்து லேசாக இடித்து ரசம் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட பக்கவாதம் மற்றும் பித்த நோய்களை போக்கும்.
முசுமுசுக்கை தோசை
மூன்று பிடி முசுமுசுக்கை இலைகளை ஊற வைத்த கால் கிலோ அரிசியுடன் சேர்த்து அரைத்து மாவாக்கி தோசை செய்து சாப்பிட்டால் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் நாக்கு சுவையின்மை பிரச்சனை தீரும்.
முசுமுசுக்கை துவையல்
மூன்று பிடி முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி தாளித்து சாப்பிடலாம் இதனால் இறைப்பு இருமல், மூக்குப்புண் போன்றவை குணமாகும்.
முசுமுசுக்கை அடை
புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு தலா அரை கப் எடுத்துக் கொள்ளவும். முசுமுசுக்கை இலை இரண்டு கைப்பிடி அளவும்,மிளகு 2 டீஸ்பூன், போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் நன்றாக ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை மொசு மொசுக்கை இலை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்,அறைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் தேங்காய் துருவல் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொண்டால் அடை மாவு ரெடி.
நார்சத்து மிகுந்த முசுமுசுக்கை
முசுமுசுக்கையில் நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. முசுமுசுக்கையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். ரத்த அழுத்தம் கட்டுப்படும்.