மருத்துவக் கடவுள் தன்வந்திரி.


தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் நோய்கள் நீங்கும்.

தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல் நலத்திற்காக வழிபடப்படும் கடவுள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரி வடிவம் தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ் வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரிக்கு தனி சந்நதி அமைந்துள்ளது.சில சிவன்  கோவில்களிலும் தந்வந்திரிக்கு சந்நதி உள்ளது.தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். சிவன் கோவில்களில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரிக்கு தனி சன்னதி உள்ளது. மக்களை காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம். மத்ஸ்ய, கூர்ம,வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரங்களாகும். இவற்றைத் தவிர தாத்திரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

தன்வந்திரி பகவான் அவதாரம்

திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்த போது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல்வேறு தெய்வங்களும் வெளிவந்தது. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகா புருஷர் தான் தன்வந்திரி. கற்பனை செய்ய முடியாத அழகுடன் காட்சி தந்தார். சுருண்ட கேசம், செவ்வரி ஓடிய நேத்ரங்கள், ஒளி சிதறும் ஆபரணங்கள், முழங்கால் வரை நீள்கின்ற கரங்கள், சதுர் புஜங்கள், பரந்த மார்பை மறைக்கும் பட்டு பீதாம்பரங்கள், வெளிர் நீல திருமேனி, மலர்களும்,மாலைகளும் அணிந்த திருக்கோலம், மேல் இரு கரங்களில் ஆழியும் சங்கும், கீழிரண்டு கரங்களில் அமிர்த கலசமும் சீந்தில் கொடியும் ஏந்திய படி தன்வந்திரி பகவான் தோன்றினார். அவர் திருமாலின் அம்சம் உடையவராய், எல்லா வியாதிகளையும் போக்க வல்லவராய், ஆயுர்வேத சாஸ்திரத்தின் தந்தையாக விளங்கிட வந்தார். கீழிரண்டு கரங்களில் ஒன்றில் அமிர்த கலசமும், மற்றொன்றில் ரத்தத்தை தூய்மைப்படுத்த உதவும் அட்டைப் பூச்சியும் கொண்டு தோன்றினார் என்று புராணங்களில் கூறப்படுகிறது. தன்வந்திரி பகவான் சாக்ஷாத் விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தார் என்று பாகவதமும், ராமாயணமும் பறைசாற்றுகின்றன.

அமிர்த கலசத்துடன் தோன்றிய தன்வந்திரி பகவான்:

அமிர்த கலசத்துடன் தன்வந்திரி பகவான் திருப்பாற்கடலில் தோன்றிய உடன் தேவர்களும் அசுரர்களும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். அசுரர்கள் காரியத்திலேயே குறியாக பகவானிடம் இருந்து அமிர்தப் பாத்திரத்தை வலிந்து பிடுங்கிக் கொண்டு தமக்குள் பங்கிட்டுக் கொள்ள விரைந்து அங்கிருந்து அகன்றார்கள். ஏமாந்துவிட்ட தேவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு தன்வந்திரி பகவான் மறைந்து விட்டார். பின்னர் அழகிய மோகினி உருவம் கொண்டு அசுரர்களை மயக்கி கலசத்தை கையில் பெற்றுக் கொண்டு எல்லோருக்கும் தானே சரியாக பங்கிட்டு தருவதாக சொல்லி அசுரர்களை மயங்கச் செய்து அமிர்தத்தைத் தேவர்களுக்கு மட்டுமே வழங்கிவிட்டு மறைந்து சென்றதாக புராண வரலாறு கூறுகிறது. பாற்கடலில் தோன்றிய தன்வந்திரி யின் கலசத்திலிருந்த அமிர்தத்தால் மரணம், பிணி, தளர்ச்சி ஆகியவற்றிலிருந்து தேவர்கள் விடுபட்டதாக புராண வரலாறு கூறுகிறது.

தன்வந்திரியை வழிபட்டால் நோய்கள் தீரும்.

சிதம்பரம் மந்தகரையில் உள்ள ஸ்ரீ நகரேஸ்வர சாமி கோவிலில் உள்ள தன்வந்திரி சந்நதி.

நோயின்றி வாழ வேண்டும் என்பதே மக்கள் விருப்பம், பணம் சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும், நிம்மதியான மனம் வேண்டும். உலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது

மருத்துவக் கடவுள்:

வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீ தன்வந்திரி சந்நதி

தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதியாகவும், மருத்துவக் கலையின் முதல்வராகவும் போற்றப்படுகிறார். மனிதர்களுக்கு நோய்,நொடிகள் அவரவர் கர்மவினைப்படிதான் வந்து சேரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றும்.இவரை வழிபட்டால் நோய்,நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்

ஸ்ரீரங்கம் கோவிலில் தன்வந்திரிக்கு தனி சந்நதி:

ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் உள்ள தாயார் சந்நதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவானுக்கு தனி சந்நதி உள்ளது. நோய் தீர்க்கும் தலமாக போற்றப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரிக்கு தனி சந்நதி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தன்வந்திரிக்கு தனி கோவில் உள்ளது. பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் நான்கு முனை சாலை அருகே இந்த தன்வந்திரி கோவில் அமைந்துள்ளது. கோவில் நகரமான சிதம்பரத்தில் மந்தகரைப் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலா துவக்கப் பள்ளி அருகே உள்ள சிவன் கோவிலில் தன்வந்திரிக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. மந்தகரையில் உள்ள ஆரிய வைசிய சமாஜ் நந்தவனப் பகுதியில் அழகிய ஸ்ரீ நகரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தன்வந்திரி பகவானுக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அமாவாசையன்று தன்வந்திரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் தன்வந்திரிக்கு சிறிய அளவில் தனிக் கோவில்.

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அண்ணாமலை நகரில் முன்பு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்ட போது  மருத்துவமனை அருகில் எவ்வித கோயிலும் இல்லாத சூழல் இருந்தது. மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வரும் உறவினர்கள் இறைவனை வேண்டுவதற்கு அருகில் கோவில்  ஏதும் இல்லாததால் மனதளவில் வேண்டிக் கொண்டனர். இதனை பார்த்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும் தற்போது மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் டாக்டர் ஜூனியர் சுந்தரரேஷ் அவர்களின் பெரும் முயற்சியால் மருத்துவர்கள் ஊழியர்களின் உதவியுடன் மருத்துவமனை நுழைவாயில் அருகே மருத்துவக் கடவுளாக போற்றப்படும் தன்வந்திரிக்கு சிறிய கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் இந்த மருத்துவமனைக்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகள் தன்வந்திரியை வணங்கி வழிபட்டு செல்கின்றனர். மேலும் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ் மருத்துவத் தந்தை தன்வந்திரி என்ற நூலினையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.