தேசிய நெடுஞ்சாலையில் அகற்றப்பட இருந்த பிரமாண்டமான மரங்கள் வேருடன் இடம் மாற்றம்!


உயர வளர்ந்து, அகல கிளை பரப்பி நிழல் தந்து கொண்டிருந்த பழமை வாய்ந்த நூற்றாண்டு கண்ட மரங்களை வெட்டி அகற்ற முயல்வதை பார்த்துவிட்ட  சமூக ஆர்வலர் ஒருவர் அந்த இடத்தை விட்டு கடக்க முடியாமல் பதற்றமடைந்தார்.  சிதம்பரம் அருகே உள்ள சி.வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் தரணி(61). இவர் சென்னை மணலியில் ஜெனரேட்டர்களை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தரணி அண்மையில் காரில் சித்தூர் சென்று கொண்டிருந்த போது ராணிப்பேட்டை சிப்காட் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது சாலையின் அருகே இருந்த சுமார் 100 வருட பழமையான மரங்களை  அகற்ற முயன்றதை பார்த்தார்.

. 

அதில் ஆலமரம் ஒன்று, அரசமரம் இரண்டு, ஈச்சமரம் நான்கு ஆகிய மரங்களை நெடுஞ்சாலை துறையினர் முழுமையாக அகற்ற முயன்றனர்.  அப்போது தரணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மேற்கண்ட மரங்களை நான் எனது சொந்த செலவில் அகற்றி கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சொந்த ஊரான வீரசோழகன் கிராமத்தில் உயிருடன் மாற்றம் செய்து கொள்வதாக கூறினார். அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நல்ல முறையில் அந்த மரங்களை வேருடன் அகற்றி 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் சிதம்பரம் அருகே உள்ள வீரசோழகன் கிராமத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நட்டுள்ளனர்.

புவி வெப்பமடைவதால் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் இந்த வேளையில் இந்த பெரு முயற்சியில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் தரணி,  அவரது சகோதரர் முரளிதரன், அக்ரி கமலக்கண்ணன், ராஜா, பாலாஜி மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.