அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை ஆதிபராசக்தி இப்பரந்த உலகின் அஷ்ட திக்கிலும் எண்ணுதற்கரிய திருத்தலங்களில் கோவில் கொண்டுள்ளார். காஞ்சியில் காமாட்சி கருணை வடிவமாகவும்,காசியில் விசாலாட்சி அருளே வடிவமாகவும், மதுரையில் மீனாட்சி அரசாட்சி கொண்டமையாகவும் விளங்குகின்றனர். திருச்சியில் மாரியம்மனாகவும், திருவேற்காட்டில் கருமாரியம்மனாகவும், திருவொற்றியூரில் வடிவுடை நாயகியாகவும், சிதம்பரத்தில் சிவகாமியாகவும்,தில்லைக் காளியாகவும், தில்லையம்மனாகவும் கோவில் கொண்டுள்ளார் பார்வதிதேவி. ஆதிகாலத்தில் சிதம்பரம் தில்லை செடிகள் புதர் போல் வளர்ந்து தில்லை வனமாக விளங்கியது. தில்லையின் நடுநாயகனாக விளங்கும் பொன்னம்பலத்தான் வீற்றிருக்கும் திருக்கோயிலின் பெயர் சிற்றம்பலம். அது நாளடைவில் மருவி சிதம்பரம் ஆனது. ஆதலின் இதுவே இன்று ஊருக்கும் பெயராகிவிட்டது. சிதம்பரம் ஆம் சைவ உலகில் கோவில் என்று போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம். உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆன்மாக்களை ஈர்த்து காட்சி தந்தருளும் கருணை வடிவான தில்லையம்மன் வீற்றிருக்கும் புண்ணியத்தலம். தில்லையில் ஆனந்ததாண்டவக் கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜப்பெருமானை தரிசித்த புண்ணியம்,தில்லைக் காளி தேவியையும் தரிசித்தால் தான் பக்தி முழுமை பெறும் என்று கூறப்படுகிறது. தில்லையின் எல்லையை மிதித்தாலும் போதுமே அறியாமை அகலுமே! தில்லை தரிசனத்தின் மாண்பிற்கு எல்லை ஏது? என்கின்றனர் அடியார்கள். தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எல்லையில் தில்லைக் காளியம்மன் கோவில் உள்ளது.
தீவினையை அகற்றும் தில்லைக் காளி.
சிவபெருமானுடைய அருளே வடிவமாக, ஞானமே திருவுருவமாக விளங்கும் அன்னை பார்வதி தேவி ஆனந்த கூத்தனுக்கு அருகில் சிவகாமியாக எப்போதும் அவனது ஆடல் கண்டு இன்புற்றிருப்பதோடு தில்லையின் எல்லையிலே தில்லைக்காளியாகவும், பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் தனிக்கோவில் கொண்டு அருள் பாலித்து வருகின்றார். தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைக்காளியும் நல்லவைகளை அருளும் சாந்த சொரூபணியாக தில்லையம்மனும் இரு வடிவமாக இருந்து அருளாட்சி செய்கின்றனர். இக்கோவில் சுமார் 725 ஆண்டுகளுக்கு முன்பு கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னரால் கட்டப்பட்டுள்ளதாக புராண வரலாறு கூறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தில்லைக் காளி கோவிலுக்கும் சென்று வழிபடுவது வழக்கம். நடராஜர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தில்லைக் காளி கோவிலுக்கு செல்வதாக இருந்தால் முதலில் நடராஜர் கோவிலின் வடக்கு சன்னதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு வடக்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று சிவகாமியம்மன் மற்றும் நடராஜப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு அதே கோபுரம் வழியாக வெளியே வந்தால் வடக்கு சன்னதியின் எதிர் புறத்தில் தில்லைக் காளி கோவிலின் நுழைவு வாயில் ஆர்ச் இருக்கும். அந்த ஆர்ச் வழியாக சென்றால் எளிதாக தில்லைக் காளி கோவிலை அடையலாம்.
தில்லைக் காளி கோவில் தல வரலாறு.
கைலாயத்தில் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் உரையாடல் ஏற்பட்டு தொடர்ந்து ஊடலால் விவாதமே உருவாகி விட்டது. சிவம் பெரிதா, சக்தி பெரிதா? இதுதான் விவாதம். ஆட்டிப்படைக்கும் நாயகன் ஈசன் சிவமே பெரியது என்று கூற,அருளாட்சி படைக்கும் நாயகி பார்வதி தேவி சக்தி தான் பெரியது என்றும் உரைக்கின்றார்கள். சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்று ஈசன் உரைக்க,சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்று பார்வதிதேவி எதிர்க்க இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிவமும், சக்தியும் ஒன்றே, ஒன்றோடு ஒன்று உறவு இல்லையேல் உலகில் எந்த ஒரு இயக்கமும் இல்லை என்ற மெய்ஞானத்தை உணர்த்தவும், உலக நலன்களை கருத்தில் கொண்டும் பார்வதிதேவி தனது மமதையால் சக்தியே பெரியது என்று கூறும் காழ்ப்புணர்வை உணர்த்த வேண்டியும், நாடகத்தை துவக்கின்றார் இறைவன். ஆம் ஈசன் பார்வதியை காளியாய் சபித்து விடுகின்றார். இவ்விதமாக காளியின் தோற்றம் கொண்ட உமையவளான பார்வதி தேவி இறைவனின் அருளாணையின் வண்ணம் ஊர் மாறி,உரு மாறி காளியின் கோரத் தன்மை மாறாமல் அரக்கர் குல அசுரர்களை சம்ஹாரம் செய்து தேவர்கள், முனிவர்கள் மற்றும் ஏனைய உலக ஜீவராசிகளுக்கு அபயம் அளித்தார். அதே வேளையில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்குளிர கண்டு மகிழ வேண்டும் என்று வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் சிவபெருமானை வேண்டி கடும் தவம் புரிந்தனர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு தைப்பூச திருநாளில் இறைவன் ஆனந்த தாண்டவம் ஆடி காட்சி தந்தார். அதே நேரத்தில் சிவபெருமானின் அருளுக்காக தவம் இருந்த தில்லைக் காளியின் தவத்தினை பொருட்படுத்தாமல் தேவியை விட அடியார்களின் பூஜையே பெரிதாக எண்ணி அவர்களுக்கு காட்சி கொடுத்ததால் ஈஸ்வரன் மீது கோபம் உண்டானது. இதனால் அவர் தில்லை வனத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் தீங்கு செய்ய தொடங்கினார். முனிவர்களின் தவக்கோலங்களை சிதைத்து யாகங்களை அழித்து ஆனந்த தாண்டவம் புரியும் ஈசனை அடைந்த காளிதேவி அவருடன் வாதித்து தன்னுடன் நடனப் போட்டிக்கு அழைத்தார்.அதனை ஏற்றுக் கொண்ட ஈசன் போட்டி என்று வந்துவிட்டால் அதற்கு ஒரு நிபந்தனை வேண்டுமென்பதால் அதற்கு காளி இந்த போட்டியில் நான் தோற்றுவிட்டால் தில்லையின் எல்லைக்கு சென்று விடுகிறேன் என்றார். இதை ஏற்று சிவபெருமானும், காளிதேவியும் ஆடத் தொடங்கினார்கள்.
சிவபெருமான் ஆடிய ஊர்த்துவ தாண்டவம்.
சிவபெருமானுக்கும், காளிதேவிக்கும் நடனப் போட்டி தொடங்கியது. பிரம்மதேவன் ஜதி சொல்ல, மகாவிஷ்ணு மத்தளம் அடிக்க, நந்தி தேவர் தாளமிட, நாரதர் தம்பூரா மீட்ட,சரஸ்வதி வீணையில் சுதி சேர்க்க, ஈசனும், காளியும் ஆடிக் கொண்டிருந்தனர். முனிவர்களாலும், தேவர்களாலும் வெற்றி தோல்வியை ஊர்ஜிதம் செய்ய இயலாத நிலையில் சிவதாண்டவம் நடனம் தொடர்ந்து நிகழ்ந்தது.நடன இறுதியில் சிவபெருமான் தமது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழுமாறு செய்தருளி, நடனமாடியபடி அக்குண்டலத்தை தமது காலினாலே எடுத்து தலைவரையில் காலை தூக்கி காதிலும் அணிந்து கொண்டார். இந்த நடனம் தான் ஊர்த்துவதாண்டவம் எனப் பெயர் பெற்றது. காளிதேவி பெண் ஆதலால் ஈசனைப் போன்று காலை தூக்கி ஊர்த்துவதாண்டவம் ஆடுவதற்கு நாணமுற்று இந்த போட்டியில் தோற்றதாக வரலாறு கூறுகின்றது. கோபமே உருவானவர் காளி. ஈசன் தன்னை மதியாமல் அடியார்களை மதித்து காட்சி தந்தமைக்கு ஏற்பட்ட கோபம் தனியும் முன்னே நடனப் போட்டியில் தோற்றத்தினால் ஏற்பட்ட கோபம் தீப்பிழம்பாக பெருக்கெடுத்து முகம் சிவந்து தில்லையின் எல்லைக்கு சென்று தில்லைக் காளியாக கிழக்கு நோக்கி அமர்ந்தார். இதனை அறிந்த தேவர்களும், முனிவர்களும் ஐயம் கொண்டனர். சிவன் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவன் இல்லை. இவர்கள் இருவரும் இப்படி வேறு வேறு பிரிந்து இருந்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்கும்? இறைவனிடம் முறையிட்டனர் தேவர்களின் வேண்டுகோளின் பேரில் இறைவன் காளிதேவியிடம் சென்று, “காளி அரக்கர்களின் அழிவுக்கே உன்னை உருவாக்கினேன். அரக்கர்களின் நாசம் அடங்கிவிட்டது; நீ உன் சாபம் நீங்க பெற்று சிவகாமி என்னும் நாமநேயத்துடன் வருவாயாக” என்றார். அதற்கு தேவி”இறைவா அரக்கர்களின் நாசம் அடங்கிவிட்டது ஆனால் அதனிலும் கொடிய அகம்பாவம் ஆணவம் இன்னும் அழிய பெறவில்லையே என்றார். தேவி உன் கோபம் நியாயமானதே. நீ இந்த எல்லையில் வந்து விட்டதால் உன் பெருமை குன்றாது. அதுமட்டுமல்ல நான் தில்லையில் நிரந்தரமாக காட்சி தர எழுந்தருளும் சமயம் என்னை வணங்கும் பக்தர்கள் உன்னையும் வந்து தரிசிக்கின்ற போது தான் பயனும் பக்தியும் முழுமை பெறும் என்றார்.
நான்கு வேதங்களால் காளியை சாந்தப்படுத்திய பிரம்மன்.
சிவபெருமான் இவ்விதமாக கூறியும் காளி தேவியின் சினம் அடங்கவில்லை. அவரை ஸ்ரீ விஷ்ணு சாந்தப்படுத்தினார். அப்படியும் அவரது கோபம் சிறிதும் குறையவில்லை. நான்முகன் ஸ்ரீ பிரம்மன் காளியை நான்கு வேதங்களினின்றும் பலவாறு துதித்து சாந்தமடையுமாறு வேண்டினான். ஸ்ரீ பிரம்மனின் பூஜைக்கு மணமுகந்து சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அருளாசி அனுகிரகம் புரியும் நோக்குடன், தில்லையின் எல்லையில் தில்லைக் காளியாகவும், வேதத்திற்கு ஒரு முகமாக நான்கு முகம் கொண்டு மேற்கு நோக்கி ஸ்ரீ தில்லையம்மன் ஸ்ரீ பிரம்மசாமுண்டீஸ்வரி என்னும் திருப்பெயருடன் எழுந்தருளினார். பின்னர் சிவகாமியாக இறைவனுடன் இணைந்து காளியின் சாபம் நீங்க பெற்றார். தில்லை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார் தில்லைக் காளி. எண்ணற்ற குடும்பங்களின் குலதெய்வமாகவே வணங்கப்பட்டு வருகிறார். தீமைகளை தீய எண்ணங்களை, பகைவர்களை அழிக்க வல்ல பேராண்மை பெற்ற ஆற்றல் மிக்கவராக விளங்க பக்தர்கள் காளி வழிபாட்டினால் அந்நிலையை அடைகின்றனர். காளி ஆடிய ஆட்டத்தினை நினைவு கூறுவதாக இன்றும் கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் காளி ஆட்டம் நிகழ்ந்து வருவதை நாம் காண முடிகின்றது. தில்லையின் எல்லையில் அமர்ந்து காத்து வருவதால் “தில்லைக் காளி எல்லைக்கப்பால்” என்ற சொல் வழக்கு வழங்கி வருகின்றது. தில்லையில் இறைவன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை நினைவு கூறும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபைக்கு எதிரே நிருத்த சபையில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியை மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1178-1218) எழுந்தருளச் செய்தார். தில்லைக் காளி தான் சாப விமோசனம் பெறவும், ஈஸ்வரனுடன் இணையவும் வேண்டி தவம் இருந்த சுயம்புலிங்க வடிவமான திருமூலநார் சுவாமி நடராஜர் கோவிலில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடுத்தக்கது.நடராஜப் பெருமானின் திருக்கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே தில்லைக்காளிக்கு கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனுடைய படைத்தலைவரும், பல்லவகுல சிற்றரசுரமாகிய கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1229-1278) தன் ஆட்சியை நிறுவுவதில் ஏற்பட்ட இடையூறுகளை நீக்கி தனக்கு வெற்றி அருள வேண்டும் என்று தில்லைக்காளியை வழிபட்டுள்ளனர். அம்பிகையின் அருளால் அல்லல் அகன்று ஆட்சி நிறுவிய அரசன் தில்லைக்காளிக்கும், பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கும் திருக்கோயில் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது.
கோவில் சிறிதாயினும் அதன் சக்தி மிகப்பெரியது.
கோவில் சிறிதாயினும் அதன் சக்தி ஆழ்கடலையும் விட பெரியது என தில்லைக் காளி கோவில் குறித்து கூறப்படும். சிதம்பரம் எல்லையில் அருள் பாலித்து வரும் தில்லைக்காளி கோவிலின் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. கோவிலின் எதிரே சிவப்பிரியை தீர்த்தக்குளம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலின் புண்ணிய தீர்த்தங்கள் பத்து உள்ளது. இதனை தச தீர்த்தங்கள் எனப் போற்றப்படுகிறது. இந்த தச தீர்த்தங்களில் சிவப்பிரியை தீர்த்தக்குளமும் ஒன்று. தீர்த்தக் குளத்திற்கு சென்று தூய்மைப்படுத்தி கொண்டு தில்லைக் காளி கோவிலின் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் தென்பகுதியில் பிரசன்ன விநாயகர் திருக்கோவிலும், வட பகுதியில் முருகப்பெருமான் திருக்கோவிலும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. விநாயகரையும், முருகப்பெருமானையும் தரிசித்துவிட்டு உள்ளே சென்றால் நுழைவாயிலில் விளங்கும் துவார சக்திகள் அழகொழுகும் கலைப் படைப்பாக அன்னைக்கு காவலாக இருக்கின்றனர். அதனை கடந்து உள்ளே சென்றால் பிரம்ம சாமுண்டீஸ்வரி என்ற பெயர் கொண்ட ஸ்ரீ தில்லை அம்மன் எழுந்தருளியுள்ளார். நான்கு முகங்களும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இவ் அம்பிகை சாந்த சொரூபிணியாக காட்சியளிக்கின்றார். இதன் அருகே வடமேற்கில் கிழக்கு நோக்கி தில்லைக் காளி அருள்பாலிக்கின்றார். அஷ்ட கரங்கள் கொண்டு காளிதேவி உக்கிர சொரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். தில்லைக் காளி திருவுருவம் வெள்ளை வஸ்திரம் சூட்டப்பட்டு, குங்குமம் காப்பு செய்து கண்களை மட்டுமே நாம் காணச்செய்து வணங்கப் பெரும் தோற்றம் பக்தி பரவசம் ஏற்படுகின்ற கருணையே வடிவான கண்களால் நம்மை அரவணைக்கும் அன்னையை கரம் கூப்பி வழிபடும்போது பரவசம் ஏற்படுகிறது. இக் கோவிலில் பரமேஸ்வரியின் கருவறையைச் சுற்றி அம்பிகை வடக்கு பிரகாரத்தில் வடக்கு நோக்கி நான்முகத்துடன் கரத்தில் ஓலைச்சுவடி எழுத்தாணி தாங்கி பிரம்ம சொரூபிணியாகவும்,கிழக்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கி ஏக முகத்துடன் கரத்தில் சங்கு சக்கரம் தாங்கி நாகவைஷ்ணவ சொரூபிணியாகவும், தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி மான்மழுவேந்தி கடம்பவன தக்ஷண சொரூபிணியாகவும் மூவகை சக்திகளாக காட்சி தருகின்றார். கோவில் தெற்கு பிரகாரத்தில் ஸ்ரீ விநாயக பெருமான் ஏழு திருகரங்களுடன் கூத்தாடும் கோலத்துடன் விளங்குகின்றார். கலைமகளுக்கு நின்ற நிலையில் வீணை வாசிக்கும் அபிநயத்துடன் கலை அம்சங்களுடன் சிலை வடிக்கப்பட்டு ஸ்ரீ சர்வ வித்யாம்பிகை எழுந்தருள செய்திருப்பது சிறப்பு.
தில்லைக் காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டும்.
தில்லைக் காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் தவிர வேற எந்த திரவியங்களை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. உமையாள் உள்ளம் குகைந்து கோபம் கொண்டிருந்ததாலும் தம்மை வழிபடுவதற்கு சாந்தமே கொண்டிருப்பதாக வெள்ளை வஸ்திரம் சூடி குறிப்பாக உணர்த்துகின்றார். நான்முகங்களுடன் சாந்த சொரூபிணியாக காட்சியளிக்கும் தில்லை அம்மனுக்கு அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்படுகின்றன. இதில் தேன் அபிஷேகம் செய்வது அம்பாளுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. சாந்தமாக வழிபட தில்லையம்மனும், வீரம் வெற்றி வேண்டி துதிக்க தில்லைக்காளியும் அமர்ந்துள்ளனர். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி அருளும் வித்தகியை எப்படித் துதித்தாலும் நன்மையே செய்திடுவார் என மக்களால் நம்பப்படுகிறது.
தினமும் நான்கு கால வழிபாடுகள்.
தில்லைக் காளியம்மன் கோவில் காலை 6.00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். நாள்தோறும் காலை சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை,அர்த்தசாமம் என நான்கு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பதஞ்சலி மாமுனிவர் வைதீக முறைப்படி தில்லைக் காளிக்கும், பிரம்ம சாமுண்டீஸ்வரி என்று அழைக்கப்படும் தில்லையம்மனுக்கும் தனித்தனியே மந்திரம் எந்திரம் வழிபடும் முறை முதலியவற்றை இயற்றியுள்ளமையால் அவற்றை பூஜை விதிகளின்படி கடைபிடிக்கப்படுகின்றன. தில்லைச் சிற்றம்பலவன் அருள் பெற்ற தில்லை வாழ் அந்தணர்கள் ஆடல் வல்லானை பூசிக்கும் பேறு பெற்றுள்ளதை போலவே தில்லை வனமுடைய பரமேஸ்வரியையும் பூசிக்கும் பேறு பெற்றவர்களாக தற்போது திகழ்கின்றனர்.
தில்லை காளிக் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்.
திதியை முக்கியமாக கொண்டு வைகாசி மாதம் அமாவாசைக்கு முந்திய சஷ்டியில் காப்பு கட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவமும் மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவமும் நடைபெறும். ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்பிகை கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். மாசி மாசி மகத்தன்று சமுத்திர தீர்த்த வாரியாக கிள்ளை கடற்கரைக்குச் சென்று அங்கு மீனவர்களால் உற்சவம் நடத்தப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் சிறப்பு விழா கொண்டாடப்பட்டு பத்தாம் நாள் விஜயதசமியன்று மகிஷாசுரன் சம்ஹாரம் சம்பவமாக அம்பு போடுதல் உற்சவம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி என்பது காலை 6.00மணிக்கு சந்திரனும், பௌர்ணமியின் இரு நாட்களுக்குப் பிறகு மாலை 6.00 மணி முதல் 6.15 மணிக்குள் சூரியனும் அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச் செய்யும் நிகழ்ச்சியும் அற்புதம் காண வேண்டிய ஒன்றாகும்.
கும்பாபிஷேகங்கள்
தில்லைக் காளியம்மன் கோவில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இருந்து வருகின்றது. இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களும் திருப்பணி செய்யப்பட்டு சன்னதி முன்பாக பக்தர் வழிபாட்டிற்கு தியான மண்டபம் ஒன்று புதிதாக கட்டியும், சுற்று பிரகாரங்கள் கருங்கல் தளவரிசை புதுப்பித்தும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு கடந்த 87ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு ராஜகோபுரம் நுழைவாயில் முன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அனைத்து விமானங்களுக்கும் திருப்பணி செய்யப்பட்டு ஆகஸ்ட் 31ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2007ம்ஆண்டுக்கு பிறகு தில்லைக் காளியம்மன் கோவிலில் 2023ம்ஆண்டில் மீண்டும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு செப்டம்பர் 4ம் தேதி மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.
அமாவாசையில் நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம் சிறப்பு.
சிதம்பரம் எல்லையில் அருள்பாலித்து வரும் தில்லைக் காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவிலில் ராகுகால வேலைகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேலைகளில் பக்தர்கள் தீபமேற்றி தில்லைக் காளியையும்,தில்லை அம்மனையும் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் தில்லைக் காளிக்கு அம்மாவாசை தினங்களில் சிறப்பு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த அபிஷேகத்தை பக்தர்கள் திரண்டு வந்து கண்டு தரிசித்து காளியை வழிபட்டு அருள் பெறுகின்றனர்.