சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழா!அற்புத நிகழ்வுகள்!!


பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில்.

கோயில் என்றாலே சிதம்பரத்தை தான் குறிக்கும். அந்த அளவிற்கு மிகவும் புகழ் பெற்றது ஸ்ரீ நடராஜர் கோயில். இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெறும். இத் திருவிழாக்களின் போது கோயிலில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பத்து தினங்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். 10 தினங்களும் பல்வேறு மஞ்சங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது வழக்கம்.

கைலாச வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா!

இதில் முக்கிய உற்சவமான ஐந்தாம் நாளில் தெருவடைச்சானில் சாமி வீதியுலாவும், ஏழாம் நாளில் கைலாச வாகனத்தில் சாமி வீதியுலாவும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும். இதில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ நடராஜப் பெருமானே தேரில் எழுந்தருள்வதால் மிகச் சிறப்புக்குறியதாக கருதப்படுகிறது. தேரோட்டத்தில் முதல் நாள் மாலை இறைவன் பிச்சாண்டவர் கோலத்தில் நான்கு வீதியில் வலம் வருவார். இதனைத் தொடர்ந்து இரவில்  சோமாஸ்கந்தர் வெட்டும் குதிரையில் வீதிகளில் சென்று தேரோடும் வீதிகளை பார்வையிட்டு வருவார்!

தேரோட்டம் சிறப்புகள்!

தேர் திருவிழாவில் அசைந்தாடி வரும் நடராஜர் தேர்!

தேரோட்டத்தன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுக்கு பின் கதவுகள் அடைக்கப்பட்டு மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் தேரில் எழுந்தருள்வதற்காக யாத்திர தானத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். அந்த நேரத்தில் சித்தபையை சுற்றியும், பிரகாரங்களை சுற்றியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி, எப்போ வருவார்,எப்போ வருவார் என வைத்த கண் வாங்காமல் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் மேள வாத்தியமும், சிகண்டி மணி ஓசைகளும், சங்கு நாதமும் காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டு பக்தர்களை இறை நிலைக்கு கொண்டு செல்லும். கண நேரத்தில் சித் சபையின் வெள்ளிக் கதவுகள் திறக்கப்பட ஜெகஜோதியாக மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் வெளியே வர காத்திருந்த விழிகள் எல்லாம் ஆனந்த கண்ணீருடன் ஸ்ரீ நடராஜா,நடராஜா, ஆடல்வல்லானே, ஆனந்த கூத்தனே என கோஷங்கள் முழங்க சங்கொலியும், கைத்தாளங்களும் விண்ணதிர தனித் தனி தேர்களில் எழுந்தருளி காட்சி தருவார்கள். பின்னர் விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதிகளில் வலம் வருவார்கள். பக்தர்கள் நடராஜப் பெருமானின் தேரை வா வா நடராஜா, வந்து விடு நடராஜா என முழங்கியவாரே தேர் வடம் பிடித்து இழுப்பார்கள். மாலையில் தேர்கள் நிலைக்கு வந்த பிறகு தேரில் பல்வேறு பூஜைகளுக்கு பின் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் ராஜ சபை என்கின்ற ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். இதனைத் தொடர்ந்து சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறும்.

ராஜ சபை என்கின்ற ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறும் காட்சி!

சிதம்பரம் ஸ்ரீ நடராஜருக்கு மகாபிஷேகம்!

சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே  சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அதிகாலையில ராஜ சபை என்கின்ற ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலை நேரத்தில் கோயில் கனக சபையில் அபிஷேகம் நடைபெறும். அன்று பகல் 2.00 மணிக்கு மேல் நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே சித்சபையில் எழுந்தருள்வார்கள். இந்த தரிசன விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அன்று இரவே கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்.