இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம்.


இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் (Mangrove forest)

உலகின் வெப்பம் மற்றும் மித மண்டலப் பகுதியில் உள்ள சதுப்பு நிலக்காடுகள், கடல் கரையோரங்களில் கானப்படும் சதுப்பு நிலக்காடுகளில் தோன்றும் தாவரங்கள் சதுப்புநில தாவரங்கள் (Mangrove forest) என அழைக்கப்படுகின்றன. இவை அலையாத்தி காடுகள் என்றும் கூறப்படுகிறது.கடும் புயல் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கக்கூடிய சக்தி சதுப்பு நிலக்காடுகளுக்கு உள்ளது. அந்த வகையிலே உலகிலேயே கொல்கத்தாவில் உள்ள சுந்தர்பன் அலையாத்தி காடுகள் மிகப்பெரியது என கூறப்படுகிறது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. சிதம்பரத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் உள்ளது. இந்தியாவிலேயே சதுப்பு நிலக்காடு ஒரு சுற்றுலா மையமாக திகழ்வது பிச்சாவரம் மட்டும்தான்.இது 1984ம் ஆண்டு முதல் சுற்றுலா மையமாக இயங்கி வருகிறது. சதுப்பு நிலங்களில் மட்டுமே வளரும் சுரபுன்னை, தில்லை போன்ற அரியவகை தாவரங்களைக் கொண்டு அடர்ந்து கானப்படுவது தான் பிச்சாவரம் அலையாத்தி காடுகள்.

பிச்சாவரத்தில் ஊர்ந்து செல்லும் வகையில் உள்ள நீர் நிலை.

சதுப்பு நிலக்காடுகள் என்றால் என்ன?

உலகில் வெப்ப மண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதியில் உள்ள உப்பங்கழிகளில் மற்றும் கடற்கரையோரங்கலில் காணப்படும் சதுப்புநிலங்களில் தோன்றும் காடுகள் “சதுப்பு நிலக்காடுகள்”(Mangroves) என்று அழைக்கப்படுகின்றன. சங்க காலங்களில் நெய்தல் திணையில் (கடலும் கடல் சார்ந்த இடங்களில்) தோன்றும் இவ்வகைக் காடுகள்”நெய்தலங்கானல்”என வழங்கப்பட்டன. பெரும்பான்மையான சதுப்பு நிலக்காடுகள் உலகின் வெப்பமண்டல பகுதியில் உள்ள நாடுகளில் தான் காணப்படுகின்றன உலகில் 112 நாடுகளில் சதுப்பு நிலத் தாவரங்கள் பரவி காணப்படுகின்றன என்றாலும் 15 நாடுகளில் தான் குறிப்பிடும்படியான அளவில் காடுகள் அமைந்துள்ளன உலக நாடுகளில் உள்ள சதுப்பு நிலக்கரிகளின் மொத்த பரப்பளவு சுமார் 18 மில்லியன் ஹெக்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய சதுப்பு நிலக்காடுகள்

இந்தியா சுமார் 5700 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைப் பெற்றுள்ளது. அதில் அமைந்துள்ள சதுப்பு நில காடுகளின் மொத்த பரப்பளவு 4,87,100 ஹெக்டேர் ஆகும். இக்காடுகள் கிழக்கில் கடற்கரை தான் அதிக அளவில் குறிப்பாக மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுமார் 2,75,800 ஹெக்டேர் (56.7%) பரப்பளவில் அமைந்துள்ளன. மேற்கு வங்காளம் சுந்தரவனம் பகுதியிலும், ஒரிசா மகாநதி பகுதியிலும்,ஆந்திரா கோதாவரி மற்றும் கிருஷ்ணா பகுதிகளிலும், தமிழ்நாட்டில் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளிலும், குஜராத்தில் கட்ச் மற்றும் காம்பே வளைகுடா பகுதிகளிலும், அந்தமான் நிக்கோபாரில் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.

தமிழக சதுப்பு நிலக்காடுகள்:

தமிழ்நாடு சுமார் 950 கிலோமீட்டர் நீளமான கடற்கரையைப் பெற்றுள்ள போதிலும் சுமார் 42 இடங்களில் சிறியதும், பெரியதுமான ஆறுகளும், சிற்றாறுகளும் கடலில் கலக்கும் கழிமுகச் சூழலைப் பெற்றிருப்பினும், சில இடங்களில் மட்டுமே சதுப்பு நிலக்காடுகள் தோன்றும் அமைப்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் இத்தகைய காடுகள் முத்துப்பேட்டை மற்றும் பிச்சாவரம் ஆகிய இடங்களில் மட்டுமே குறிப்பிடும்படியான அளவில் அமைந்துள்ளன.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு:

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது.கடலூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு. சுமார் 1350 ஹெக்டர் பரப்பளவில் வெள்ளாற்றின் கழிமுகப்பகுதியும், கொள்ளிடம் கழி முகப்பகுதியும் இணைந்து உருவான சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளது. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு தினசரி கடல் ஓதத்தால் மூழ்கடிக்கப்படும் நிலையில் ஓடையில் இரு கரைகளிலும் அடர்ந்து தாவரங்களை கொண்டுள்ளதால் இது விளிம்பு வகை சதுப்பு நிலக்காடு (fringe type) என அழைக்கப்படுகிறது. பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டின் மொத்த பரப்பளவில் 21 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 27 சதவீத பரப்பளவில் அடர்ந்த மரங்கள், வாய்க்கால்களின் மற்றும் ஓடைகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. சுமார் 38 சதவீத பரப்பளவில் சேரும், சகதியுமான திடலாகவும், வளர்ச்சி குன்றிய தாவரங்கள் புதராகவும் வளர்ந்தும் காணப்படுகின்றன. மீதமுள்ள இடத்தில் மணற்திட்டும் அமைந்துள்ளன.

50க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான தீவுகள்.

சிறிதும், பெரிதுமாக தீவுகளாக காட்சியளிக்கும் பிச்சாவரம்.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறிதும், பெரிதுமான தீவுகளும் அவற்றை சுற்றி பல நூற்றுக்கணக்கான வாய்க்கால்களும், ஓடைகளும் காணப்படுகின்றன. இந்நீர் நிலைகளின் ஆழம் 0.5 – 3.0 மீட்டர் அளவே உள்ளது. கழிமுகத்தின் வாய்பகுதி தூர்ந்துள்ளதாலும், நிலப்பரப்பு சாய்வாக இருப்பதாலும் கடல் ஓதத்தின் வீச்சு 0.15 – 1.00 மீட்டர் அளவே உயர்ந்து நிலப்பரப்பை மூழ்க செய்கின்றன.

அதிக எண்ணிக்கையில் காணப்படும் நீர் வாழ் உயிரினங்கள்.

கழிமுகப் பகுதி எப்போதும் ஆற்றில் வரும் நன்னீரும், கடல் நீரும் கலந்து, கடல்நீரைவிட உவர்தன்மை குறைந்த நிலையில் காணப்படுகிறது. உப்பனாறு எனப்படும் ஆற்றில் பொதுவாக கழிமுகப்பகுதியில் மற்றும் உப்பணாற்றில் காணப்படும் அனைத்து நீர்வாழ் உயிரினங்களும், பிச்சாவரம் வனப்பகுதியில் ஊட்டம் நிறைந்து இருப்பதால் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

அதிக தாவர வளத்தை பெற்றுள்ள பிச்சாவரம் “சதுப்பு நிலக்காடு”

தமிழ்நாடு பெற்றுள்ள சதுப்பு நிலக் காடுகளின் மொத்த பரப்பளவை ஒப்பிடுகையில் பிச்சாவரம் “சதுப்பு நிலக்காடு”அதிக உயிரின வளத்தையும் குறிப்பாக அதிக தாவர வளத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த சதுப்பு நிலத்தின் பரப்பளவை ஒப்பிடுகையில் ஒரு விழுக்காடு கூட இல்லாத மிகக் குறைந்த பரப்பளவை உடைய பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் இந்தியாவில் காணப்படும் மொத்த சதுப்பு நிலத் தாவரங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு (20 தாவர சிற்றினங்கள்) இங்கு உள்ளது.பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் உயிரின வளம் நிறைந்து காணப்படுகிறது. இங்கு தாவர மிதவை நுண்ணுயிரிகள், விலங்கு மிதவை நுண்ணுயிரிகள், இறால்கள், நண்டினங்கள், மீனினங்கள் உள்பட பல விலங்கு உயிரினங்கள் காணப்படுகின்றன.

இந்தியாவிலேயே ஒரு சதுப்பு நிலக்காடு சுற்றுலா மையமாக திகழ்வது பிச்சாவரம் மட்டும்தான்:

பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா மையம்

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு குறைந்த நிலப்பரப்பில் அமைந்திருந்தாலும் அதிக உயிரின வளம் கொண்டதாகவும்,இயற்கை அழகோடும் விளங்குகிறது,இதனால் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு சுற்றுலா மையமாக கடந்த 1984 முதல் இயங்கி வருகிறது. சதுப்பு நிலக்காடு ஒரு சுற்றுலா மையமாக திகழ்வது இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் என்பது மேலும் சிறப்பானதாகும்.

பித்தர்புரம் என்ற பெயரே பிச்சாவரம் என்று மருவியது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளது. முன்பு பித்தர்புரம் என்று முதலில் இந்த காடுகள் அழைக்கப்பட்டது. அதுவே மறுவி பிச்சாவரம் என்று மாறியது.

பறந்து விரிந்து காணப்படும் பசுமைக் காடுகள்.

பிச்சாவரத்திதின் எழில் மிகு தோற்றம்.

பிச்சாவரத்தில் பச்சை பசேலென பச்சை போர்வை போர்த்தியது போல் பறந்து விரிந்து கானப்படுகிறது பிச்சாவரம் வனப்பகுதி. இக்காடுகளில் ஊடுருவிச் செல்லும் நீர் நிலைகள் படகு சவாரி செய்ய ஏற்ற வகையில் அமைந்துள்ளன. மரத்திலிருந்து தொங்கும் விழுது வேர்கள், உப்பை கக்கும் இலைகள், நீரில் நடனமாடும் மீன்கள், எண்ணற்ற பறவைகளின் ஓசைகள் பார்ப்பவர்கள் கண்களை கவர்கின்றன. சிறுசிறு கால்வாய்களின் வழியாக படகு சவாரி செய்வது அலாதியான ஆனந்தத்தை தருகிறது. படகில் காட்டுப்பகுதியில் உள்ள கால்வாயின் ஒரு புறத்தின் வழியாக உள்ளே சென்று மறுபுறத்தின் வழியாக வெளியே வரும் போது சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும் இனிய அனுபவத்தைப் வார்த்தைகளால் வடிக்க முடியாது. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் படகு சவாரி செய்வது இன்பமயமானது என்பதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். உப்பனாறு கடலில் கலக்கும் கடல் முகத்துவாரத்தில் இந்த தாவரங்கள் பறந்து விரிந்து கானப்படுகிறது. இங்கு தில்லை,சுரபுண்ணை என பல வகையான தாவரங்கள் நிறைந்த காடாக இந்த வனப்பகுதி திகழ்கிறது. சுரபுன்னை தாவரத்தில் இருந்து முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும் காய்கள் தண்ணீருக்கு அடியில் உள்ள சதுப்பு நிலத்தில் விழுந்து பின்னர் அதுவே வேராகி செடியாகிறது. இங்கு தில்லை மரங்கள் அதிகமாக உள்ளதால் தில்லைவனக் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் பகுதியில் தில்லை மரங்கள் அதிகமாக இருந்ததால் ஊரின் பெயரே தில்லை என்று அழைக்கப்பட்டது. தில்லை மரம் ஒரு அரிய வகை மூலிகை என கண்டறியப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் தல விருட்சமான தில்லை மரம் தற்போது பெயருக்கு கூட சிதம்பரத்தில் இல்லை. ஆனால் பிச்சாவரத்தில் தில்லை மரங்கள் அடர்ந்து வளர்ந்து கானப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இத்தாவரம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பறவைகளின் படையெடுப்பு

இயற்கையான இடம் என்றாலே அங்கு பறவைகளுக்கு பஞ்சம் இருக்காது. பிச்சாவரம் இயற்கை எழில் கொஞ்சும் இடம் என்பதால் இங்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 170 க்கு மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வருவதாக சமீபத்திய வனத்துறை எடுத்த கணக்கெடுப்புகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் இந்த பறவையினங்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றன. பறவைகள் எழுப்பும் விதவிதமான ஒலியை கேட்டுக் கொண்டே பச்சை பசேலென மரங்களை பார்த்தபடியே படகு சவாரி செய்வது மகிழ்ச்சியின் உச்ச கட்டத்திற்கு கொண்டு செல்லும். இங்கு வரும் பறவைகளில் ஒயிட் பிரெஸ்ட், கிங்பிஷர், பெரிய ஏக்ரட்,டர்ன், வாத்து, நாரை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு பறவைகள் அதிகமாக காணப்படுகிறது.பிச்சாவரம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருப்பதால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படத்தின் முக்கிய காட்சிகள் திரைப்படமாக்கப்பட்டது. அதன் பிறகு சின்னவர், சூரியன், துப்பறிவாளன் என 10க்கும் மேற்பட்ட படங்கள் இந்த காட்டுப் பகுதியில் படம்மாக்கப்பட்டுள்ளன.

பிச்சாவரத்தில் அடர்ந்து வளர்ந்து காணப்படும் தாவரங்கள்.

20 வகையான தாவரங்கள்.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் சதுப்பு நிலத்திற்கே உரிய 20 வகையான தாவரச் சிற்றினங்கள் கானப்படுகின்றன. அவை வருமாறு, 1.Rhizophora apiculata(ஏந்திலைச் சுரபுன்னை) 2.Rhizophora mucronata(மூக்குற்றிச் சுரபுன்னை) 3.Rhizophora lamarckii(பேய்ச் சுரபுன்னை) 4.Bruguiera cylindrica (பன்றிக்குற்றிச் சீரா) 5.Ceriops decahdra(சிறுகண்டன்). 6.Avicennia marina(அலையாத்திக்கண்டன்) 7.Avicennia officinalis (உப்பாற்றிக்கண்டன்) 8.Lumnitzera racemosa(இணரித் திப்பரத்தை) 9.Aegiceras corniculatum (பூங்கொந்தாளம்) 10.Xylocarpus granatum(காயல் கண்டலம்) 11.Sonnevstia apetata (பூவா மரைமா) 12. Dalbir spinosha(கழிமுள்ளி நூக்கம்) 13.Excoecaria agallocha(அகதித் தில்லை) 14.Acanthus ilicifolius (கழிமுள்ளி கண்டன்) 15.Suaeda maritime (அளத்து உமரி) 16.Suaeda monoica(கரு உமரி) 17.Sesuvium potulacastrum (வங்கார வழுக்கை) 18.Salicornia brachiata(சிறுபவழக் காலி) 19.Anthrochemum Lndicun (பவழக் கொல்லியம்). 20.Derris Trifoliate (மூவிலைப் புனலி). பிச்சாவரத்தில் இந்த 20 வகையான தாவரங்களை கண்டு ரசிக்கலாம். இங்கு வளரும் தாவரங்களில் சில சுவாசிப்பதற்கு ஏற்றவாறு மேல் நோக்கி நீருக்கு மேல் வேர் விட்டு வளர்கின்றன‌.சில தாவரங்கள் மரத்தின் மேல் பகுதியில் இருந்து விழுதுகள் போல் கீழ் இறங்கி ஊன்றி கொள்கின்றன.

சிற்றினத் தாவரங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் உள்ள 20 சிற்றின தாவரங்களில் சில தாவரங்கள் முழுவதும் அழியும் நிலையில் உள்ளது. குறிப்பாக காயல் மண்டலம் (Xylocarpus granatum) மற்றும் பூவா மரைமா(Sonnetatia apetala) ஆகியவற்றை தற்போது காணப்படவில்லை என தாவரவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ள சில தாவர இனங்களின் குறிப்பாக “கழிமுள்ளி நூக்கம்”(Dalbergia spinosa) எண்ணிக்கையும் குறைந்து அழியும் தருவாயில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சிற்றினத் தாவரங்களை அறியாமல் பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விதைகள் கனிக்குள் இருக்கும் போதே முளைக்க தொடங்கி விடுகின்றன.

இவ்வகை தாவரங்கள் உவநீரை உறிஞ்சி நன்னீரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு குப்பை தான் இலைகளில் பெற்றுள்ள நீர்மத்திசுக்களில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. பொதுவாக தாவரங்களிலிருந்து பழங்கள் பழுத்து கீழே விழுந்து சிதைந்து விதைகள் வெளியேறி மண்ணில் விழுந்து வேரூன்றி பின்னர் வளர்கின்றன. ஆனால் சதுப்பு நில தாவரங்களில் உள்ள பழங்கள் தாய் தாவரத்தில் இருக்கும் போதே அதில் உள்ள விதை முளைத்து வளர்கின்றன இவ்வகை விதை முளைத்தலுக்கு வீவிபேரி(vivipary) என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ரைசோபோரேசி(Rhizophoraceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் விதைகள் தாய் தாவரத்தில் இருக்கும் போதே முளைத்து முருங்கைக்காய் போன்று நீண்டு வளர்ந்து சரியான சூழலில் சேற்றில் விழுந்து பதிந்து வளர்கின்றன‌ மற்ற தாவரங்களிலும் விதைகள் கனிக்குள் இருக்கும் போதே பாதுகாப்பாக முளைக்க தொடங்கி விடுகின்றன. மழைக்காலங்களில் நீரின் உவர்தன்மை குறைந்த காலங்களில் விழுந்து மண்ணில் வேரூன்றி வளர்கின்றன.

இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் அவ்வபோது பறவைகளை கண்டு மகிழலாம்.

சதுப்பு நிலக்காடுகளின் பயன்கள்

இந்த சதுப்பு நிலக்காடுகளின் பயன்கள் வருமாறு, இயற்கை இடர்பாடாகிய புயல், சூறாவளி, சுனாமி ஆகியவற்றிலிருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கிறது.கார்பன்-டை ஆக்சைடு அளவை குறைத்து தட்பவெப்ப நிலையை சீர் செய்கிறது. கடலுக்கும், நிலத்திற்கும் இடைப்பட்ட மண்டலமாக அமைந்து ஒரு அரணாக திகழ்கிறது. ஆற்றின் வழியே ஏற்படும் மண் அரிமானத்தை தடுப்பதோடு வண்டல் மண்ணை தடுத்து நிறுத்தி நிலம் உருவாக்கப்படுகிறது.பல்வேறு கடல் வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடங்களாகவும், இனப்பெருக்கம் செய்வதற்கான இடமாகவும், முட்டை பொறிப்பதற்கு ஏற்ற இடமாகவும், தொட்டிலாகவும் உள்ளது. கடற்கரை பகுதியில் உள்ள பறவை இனங்களுக்கு வாழிடமாகவும் இனப்பெருக்கத்திற்கான இடமாகவும் திகழ்கிறது. இங்கு சருகுகள் சிதைந்து அதிக அளவில் இலை மட்டும் உருவாகி மீன் நண்டு போன்ற பிற கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகிறது. உயிரியியல் பெருக்கத்திற்கு இந்த சதுப்பு நிலக்காடுகள் ஏற்ற இடமாகவும், உறுதுணையாகவும் உள்ளது (biodiversity).

பறவை இனங்களுக்கு வாழிடமாக உள்ள பிச்சாவரம்.

பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகம் கட்டப்பட்டு படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்தி வருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இந்த சதுப்பு நிலக்காட்டின் அழகை தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்று ரசித்து வருகின்றனர். சுற்றுலா மையமாக விளங்கும் இந்த சதுப்பு நிலக்காட்டின் இயற்கை அழகை நுகர்தல், பறவைகளை கண்ணுறுதல், படகு சவாரி செய்தல் ஆகியவற்றுக்கான இடமாக திகழ்கிறது. வனத்துறை பாதுகாப்பில் உள்ள இந்த பிச்சாவரம் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் ஏராளமான படகுகள் விடப்பட்டுள்ளது. பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தில் வனப்பகுதியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் அதி நவீன தொலைநோக்கி கருவிகள் பொரீத்தப்பட்டுள்ளன. அந்த தொலைநோக்கு கருவி மூலம் பிச்சாவரத்திதின் முழு அழகையும் காணலாம்.

பிச்சாவரத்தில் படகு சவாரிக்கு தயாராக உள்ள படகுகள்.

பிச்சாவரத்தில் அதிகம் உள்ள நீர் நாய்கள்.

பிச்சாவரத்தில் தண்ணீரில் நீந்தி விளையாடும் நீர் நாய்கள்.

பிச்சாவரத்தில் நீரிலும்,நிலத்திலும் வாழும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன குறிப்பாக நீர் நாய்கள், நரிகள் அதிகம் உள்ளது. நாம் படகு சவாரி செய்யும்போது அடிக்கடி நீர் நாய்களை காணலாம். இங்குள்ள உயிரினங்கள் குறித்து வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர் .இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் பறவைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பறவைகளின் வரத்து அதிகமாக இருக்கும்.

பிச்சாவரத்தில் உள்ளூர் தயாரிப்பு உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு தினந்தோறும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த சுற்றுலா மையத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பிச்சாவரத்தில் மீன், நண்டு, இறால்கள் அதிக அளவில் கிடைப்பதால் இப்பகுதிக்கு உரிய மீன் குழம்பு, மீன் பொரியல், இறால் தொக்கு, நண்டு கிரேவி ஆகிய சிறப்பு உணவு வகைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பிச்சாவரத்தில் வெறும் படகு சவாரி மட்டுமே இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்த வேண்டும். பிச்சாவரத்தை ஒட்டி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நீர் சார் பொழுதுபோக்கு மையம் (eco friendly – Marine amusement park) ஒன்றை அமைக்க வேண்டும். பிச்சாவரத்தில் இருந்து அருகில் உள்ள பரங்கிப்பேட்டை வரை படகு பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சுற்றுலாப் பயணிகள் முன் வைத்துள்ளனர்.